ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்படிருந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்திருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கேள்வி எழுப்பினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவே மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முதலில் மஹிந்த ராஜபக் ஷவே மகிழ்ச்சியடைய வேண்டும்.
முன்னைய ஆட்சியில் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வெளிநாட்டு ஊடகங்கள் ஆவணங்களையும், புகைப்படங்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மஹிந்த தரப்பினர் இதுவரையில் எந்தவொரு காரணங்களையும் முன்வைக்கவில்லை. இலங்கை இராணுவம் தொடர்பில் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எமது இராணுவத்தை நியாயப்படுத்தி காப்பற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. ஆனால் மஹிந்த அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
அதேபோல் மேற்கத்தேய நாடுகளின் எதிரிகளை ஆதரித்தமை இலங்கை மீது சர்வதேசம் அழுத்தம் செலுத்த காரணம் எனவும் நாட்டை இவர்கள் பங்குபோடுவதாகவும் மஹிந்த மற்றும் மஹிந்த ஆதரவு தரப்பினர் முன்வைக்கும் காரணங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அமெரிக்காவும், பிரித்தானியாவும் எப்போதும் இலங்கைக்கு உதவும் நோக்கத்திலேயே செயற்படுகின்றன.
அதேபோல் அமெரிக்கா ஆதரிக்காத நாடுகளுடன் இலங்கை நட்புறவை பேணுவதனால் அவர்கள் எம்மை எதிர்க்கவேண்டிய அவசியமும் இல்லை. மேற்கத்தேய நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க பிரதான காரணம் மனித உரிமை மீறல்களேயாகும். மனித உரிமை மீறல்கள் விடயத்தில் அரசாங்கம் சரியாக நடந்திருந்தால் எமக்கு இவ்வாறானதொரு அழுத்தம் ஏற்பட்டிருக்காது.
நாட்டில் ஜனவரி மாதம் மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிடின் இப்போது எமக்கு எதிரான விளைவுகள் மிக மோசமானதாகவே அமைந்திருக்கும். பொருளாதார ரீதியிலும், ஏனைய பாதுகாப்பு ரீதியிலும் எமக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்திருக்கும்.
ஒருவேளை தொடர்ந்தும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்திருந்தால் அவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் முன்வைக்கப் பட்டிருக்குமாயின் இன்று நாட்டின் நிலைமை என்னவாகும். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது அரசாங்கம் முதற்கடமையாக யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எமது இராணுவத்தை கொண்டுசெல்லும் செயற்பாட்டில் இருந்து காப்பாற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பேரவையிலும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் எமது அரசாங்கம் சரியான முறையில் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் சர்வதேசத்தையும் திருப்திப்படுத்தும் வகையிலும் கையாண்டுள்ளோம்.
ஆகவே இது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இப்போது நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் முழுமையாக உள்நாட்டு பொறிமுறைகளை மையப்படு த்தியே அமைந்துள்ளது. அதேபோல் சர்வதேச உதவிகளையும் பெற்று ஒரு பூரணமான விசாரணையாகவே அமைந்துள்ளது. ஆகவே இதில் யாரும் முரண்படவேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.