Breaking
Sat. Jan 11th, 2025

இந்த நாட்டையும் மூவின மக்களையும் காப்பாற்றுவதே எமது ஒரே இலக்கு என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

எனது வாழ்கையில் நான் கண்ட சிறந்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரின் தன்னம்பிக்கையும் தைரியமுமே அவரை தலைவராக மாற்றியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் பாராளுமன்றின் பத்தாவது செயலமர்வு நேற்று மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றில் இடம்பெற்றது. இதில் சிறப்புரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கொண்டவாறு  தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை இன்று பாரிய மாற்றங்களையும் நல்ல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் அடைந்துள்ளது. முப்பது வருட கால இலங்கையில் இறுதி  ஐந்து ஆண்டுகளில் இலங்கை வேறொரு பாதையினை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியினால் காப்பாற்றப்பட்ட இந்த நாட்டை எதிர்காலத்தில் முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் அது இளைஞர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
இலங்கையில் முன்னுதாரணமாக சொல்லி சுட்டிக் காட்டக்கூடிய அளவில் ஒரு சில தலைவர்கள் மட்டுமே உள்ளனர். இளைஞர்கள் அவர்களை பின்பற்றி எதிர்காலத்தில் நல்ல பல தலைவர்களை இந்த சமூகத்திற்கு கொண்டு வர வேண்டும்.
எனது வாழ்க்கையில் நான் கண்ட தலை சிறந்த தலைவர் எனது சகோதரரும் இந்த நாட்டின் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக் ஷவே. அவரின் தன்னாதிக்கமும் நம்பிக்கையும் தைரியமும் இந்த நாட்டை தீவிரவாதத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. இந்த நாட்டை பல தலைவர்கள் ஆட்சி செய்துள்ளனர். எனினும் அவர்களால் தீவிரவாதத்திற்கு அடிபணிந்து செல்ல முடிந்ததே தவிர எவரும் தீவிரவாதிகளை எதிர்க்கவில்லை. எனினும் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி உருவாகியதைத் தொடர்ந்து எம்மை சந்தித்த உள்நாட்டு தலைவர்களும் சர்வதேச தலைவர்களும் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வர முடியாது. இணங்கி செயற்பட வேண்டுமென்றே தெரிவித்தனர். இந்தியா உட்பட சகலரும் விடுதலைப் புலிகளை பாதுகாக்கவே செயற்பட்டனர். எனினும் எமது இலக்கும் நோக்கமும் ஒன்றாகவே இருந்தது. இந்த நாட்டை பாதுகாத்து தேசிய ஒற்றுமையினை நிலை நாட்ட வேண்டும் என்பதே எமது கனவு. மாறாக ஒரு இனத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதோ எமது தனிப்பட்ட விருப்பமோ இல்லை.
நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கு நிறைவடைந்துள்ளது. எனினும் நாம் எதிர்பார்த்த இலக்கு இன்னும் முழுமையடையவில்லை. எதிர்காலத்தில் தலை சிறந்த சமூகத்தினையும் அபிவிருத்தியினையும் அடைய வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் தொடர்ந்தும் நாம் செயற்படுவோம். மேலும் நாட்டை பாதுகாப்பதிலும் சமூகத்திடையே சேவைகளை செய்வதிலும் இராணுவத்தின் பங்கு இருக்க வேண்டும் என பல தரப்புகளில் இருந்தும் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஒரு சிலர் இராணுவத்தை எதிர்க்கவும் எதிர்காலத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கும் உதவிக்கும் இராணுவம் தேவை என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
அதேபோல் தீய சக்திகளில் இருந்து நாட்டை பாதுகாத்து எம்மால் தொடர்ச்சியாக நாட்டை பாதுகாத்து முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் இளைஞர்கள் சரியான சிந்தனையில் நல்ல நோக்கில் எம்முடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Post