Breaking
Wed. Dec 25th, 2024

முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது.

புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி சேனநாயக்க நம்பிக்கை கொண்டிருப்பதாக, அவரது சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக்கொண்ட சகல வாக்குகளையும் எண்ணுவதன் மூலம் தமது நம்பிக்கையை உறுதி செய்வதே, தனது கட்சிக்காரரின் தேவையாகும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக பிரசன்னமாகிய பிரதி சொலிஸ்டர் நாயகம் நேரியன் பிள்ளை, அந்த மனு தொடர்பான அறிவித்தலை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

இதன் பிரகாரம் தேர்தல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பிரதிவாதிகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

By

Related Post