டெங்கு நுளம்புகள் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சல் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மழைக்கு பிந்திய காலம் என்பதால், டெங்கு நோய் தற்போது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளமையினால் பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இந்த நோய் அதிகமாக காணப்படுகின்றது.
இதனிடையே குறித்த நோய் தொற்று காரணமாக இதுவரை நாடளாவிய ரீதியில் 20 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதோடு 50 பேர் வரையில் மரணித்துள்ளனர். இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு தமது வீட்டுச் சூழலில் நீர் தேங்கி நிற்காத வண்ணம் சுத்தமாக பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.