Breaking
Mon. Dec 23rd, 2024
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை பீடத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டங்களை வழங்கியிருந்தது. 2009ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி குறித்த இருவருக்கும் கலாநிதி பட்டங்களை வழங்குமாறு பல்கலைக்கழக செனட் சபைக்கு தாமே யோசனை முன்வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமது இந்த முன்மொழிவு ஏகமனதாக செனட்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமையை பாராட்டும் நோக்கிலேயே இவ்வாறு கௌரவ கலாநிதி பட்டங்கள் இருவருக்கும் வழங்க தாம் முன்மொழிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக ஒட்டுமொத்த நாடும் பல்கலைக்கழக கல்வியும் பாதிக்கப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், கலாநிதி பட்டங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் இருவருமே கடுமையான அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உதாரணமாக ஜனநாயக ரீதியில் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றுக்கொள்வதற்கு பதிலாக, மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்தும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நீடிக்க முயற்சித்து அரசியல் சாசனத்தில் மாற்றங்களைச் செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதற்கான  ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 2013ம் ஆண்டில் வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் கோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் அனைத்துமே அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளரின் கட்டப்பாட்டின் கீழ் நடைபெற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கலாநிதி பட்டத்திற்கு இவர்கள் இருவரும் தகுதியானவர்கள் அல்ல என்பது அம்பலமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் சில வேளைகளில் இவ்வாறு கலாநிதி பட்டங்களை பிழையாக வழங்கி பிழையை உணர்ந்து கொண்டவுடன், அதனை மீளப் பெற்றுக்கொள்வது வழமையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக 1919ம் ஆண்டில் பென்சில்வேனிய பல்கலைக்கழகம் மெக்ஸிக்கோ மற்றும் அமெரக்காவிற்கான ஜெர்மனிய தூதுவர் காசியருக்கு வழங்கிய கௌரவ கலாநிதி பட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு டாக்டர் பட்டத்திற்கு பொருத்தமற்றவர்கள் என பல்கலைக்கழகங்கள் உணரும் போது அவ்வாறானவர்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட பல சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தாம் ஓய்வுப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், மஹிந்த கோதவாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டமை குறித்து எதிர்ப்பை வெளியிட்டு வரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தெவ்சிறியை தமது பிரதிநியாக பெயரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
செனட்சபையில், இந்த டாக்டர் பட்டங்களை வாபஸ் பெற்றுக்கொள்வது குறித்த யோசனையை பேராசிரியர் தெவ்சிறி அல்லது அவரது பிரதிநிதி முன்வைப்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு, கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

– GTN –

By

Related Post