Breaking
Sat. Dec 21st, 2024

அந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. கதைபோல இருந்தாலும், இது 18 வருடத்துக்கு முன்பு குவைத்தில் நடந்த உண்மைச் சம்பவம். அந்த தாய்… ஃபாத்திமா பீவி. சேய்… ஆயிஷா. சென்னை, காசிமேட்டைச் சேர்ந்தவரான ஃபாத்திமாவிடம் பேசினோம்.

‘‘காசிமேடுலதான் என்னோட குடும்பம் இருக்கு. கூடப்பிறந்தவங்க மொத்தம் மூணு தங்கச்சிங்க. நான்தான் மூத்தவ. வாப்பாவுக்குத் கூலித் தொழில், வறுமை காரணமா ஒண்ணு, ரெண்டு வகுப்போட எங்க படிப்பெல்லாம் நின்னுபோச்சு. குவைத்துல ஒரு வீட்டுல வேலை செய்ய என்னை எங்கப்பா அனுப்பி வெச்சாரு.

20 வருஷங்களுக்கு முன்ன தனியா ஃப்ளைட்ல போனப்போ, சந்தோஷத்தைவிட பயம்தான் இருந்துச்சு. உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு போய் குவைத்ல இறங்கினேன். நான் வேலை செய்யப்போன வீட்டுக்காரர், ஏர்போர்ட் ஆபீஸர்ங்கிறதால ஃப்ளைட்டை விட்டு இறங்கி னதும், ஒரு அதிகாரி என்னைக் கார்ல அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாரு. பார்த்தா… அது வீடு இல்ல; அரண்மனை! நாலு டிரைவருங்க, நாலு சமையல்காரங்க, என்னையும் சேர்த்து அஞ்சு பொம்பளைங்க வீட்டு வேலைக்கு, வேலை பார்க்கிறவங் களுக்கு எல்லாம் தனியா வீடுனு, ரொம்ப சௌகரியமான வேலை. நல்ல சம்பளம். வாப்பாவுக்கு மாசா மாசம் பணம் அனுப்பிடுவேன். வீட்டோட ஞாபகம் வரும்போதெல் லாம், பக்கத்துக் கடைக்குப் போன் பண்ணி வாப்பாகிட்ட கொடுக்கச் சொல்லிப் பேசுவேன்…” என்ப வரின் வாழ்வில் திருப்பு முனை நிகழ்ந்திருக்கிறது.

‘‘எங்க முதலாளி அம்மாவுக்கு அப்பப்போ வந்து கேக் செஞ்சு கொடுக்கும் நஷீமா, எனக்குத் தோழி ஆனாங்க. அவங்களோட சகோதரர் அப்துல்லா, நான் வேலை பார்த்த வீட்டுலயே டிரைவரா சேர்ந்தாரு. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்கிறதால எங்க வீட்டுக்கு நான் சொல்லச் சொல்ல கடிதம் எழுதிக் கொடுத்த அவரு, என் கஷ்டத்தை எல்லாம் கேட்டு ஆறுதல் சொல்வாரு. ஒருநாள், ‘நாம நிக்காஹ் பண்ணிக்குவோம்’னு சொன்னாரு. எனக்கும் அவரைப் பிடிச்சிருந்தாலும், ‘என் வாப்பாக்கிட்ட லெட்டர் எழுதிக் கேளுங்க’னு சொன்னேன். எங்க வாப்பாவும், சம்மதிக்க, எங்க முதலாளி அய்யா மற்றும் அம்மாவே கல்யாணம் பண்ணி வெச்சாங்க. தனியா வீடு எடுத்துத் தங்கி வாழ ஆரம்பிச்சோம். நான் கர்ப்பமானேன்.

அந்த நேரம் பார்த்து வாப்பா உடம்பு சரியில்லாம இறந்துட்டார். அதை என் கணவர் எங்கிட்ட மறைச்சுட்டார். ஒருகட்டத்துல எனக்கு உண்மை தெரிஞ்சப்போ, ‘நீ கர்ப்பமா இருக்கே… மனசு தாங்க மாட்டேனுதான் சொல்லல’னு சொன்னார். சில மாதங்களிலேயே எங்கம்மாவுக்கும் உடம்பு சரியில்லைனு போன் வந்துச்சு. ‘எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நீ இப்போ கிளம்பு, பின்னாடியே வந்துடுறேன்’னு ஃப்ளைட் ஏத்திவிட்டார்…’’ – இந்த முறை துளியும் எதிர்பார்க்காத ஃப்ளைட் அனுபவம் ஃபாத்திமாவுக்கு…

‘‘தன்னந்தனியா, ஆறரை மாச கர்ப்பிணியா ஏர்போர்ட்ல டெஸ்ட் எல்லாம் முடிச்சுட்டு, ஃப்ளைட் ஏறிட்டேன். குவைத்ல இருந்து கிளம்பின கொஞ்ச நேரத்துலயே வாந்தி வர ஆரம்பிச்சுடுச்சு. வலியும் கூடிட்டே போக… லேபர் பெயின்னு தெரிஞ்சவுடனே கன்ட்ரோல் ரூமுக்குச் சொல்லி, கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவுல ஃப்ளைட்டை இறக்கி, பக்கத்துல இருந்த ‘அமீர்’ மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனாங்க. சுகப்பிரசவத்துல பெண் குழந்தை பிறந்துச்சு. என் கூட ரெண்டு ஏர்ஹோஸ்டஸை துணைக்கு விட்டுட்டு அந்த ஃப்ளைட் கிளம்பிப் போயிடுச்சு. குறைப்பிரசவம்ங்கிறதால குழந்தையை இன்குபேட்டர்ல 25 நாள் வெச்சிருந்தாங்க’’ – கதை போல் கேட்டோம் ஃபாத்திமாவின் பிரசவ நிகழ்வை.

ஃபாத்திமாவின் மருத்துவமனைச் செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொண்ட குவைத் ஏர்வேஸ், அவர் பாம்பே ஏர்போர்ட் வந்து இறங்கும் வரையிலான செலவுகளையும் ஏற்றுக்கொண்டது. மேலும், ஃபாத்திமாவின் குழந்தை, வாழ்நாள் முழுக்க குவைத் ஏர்வேஸில் இலவசமாகப் பயணிக்கலாம், குழந்தை வளர்ந்ததும் குவைத் ஏர்வேஸிலேயே வேலை தரப்படும் என்ற பரிசையும் தந்தது. ‘அமீர்’ மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்குத் தேவையான பொருட்கள் மற்றும் ஃபாத்திமாவுக்கு ஆடைகள் பரிசளித்தது. செய்தித்தாள்களில் ஃபாத்திமா பற்றிய செய்தி வர, கத்தார் நாட்டு அரசுப் பிரதிநிதி நேரில் வந்து ஃபாத்திமாவையும், அவர் குழந்தையையும் நலம் விசாரித்துச் சென்றார். பிறக்கும்போதே இவ்வளவு புகழுடனும், பரிசுடனும் பிறந்த குழந்தைக்கு, அவர் அப்பா தந்த பரிசு… இதுவரை நேரில் பார்க்கவில்லை; இனியும் பார்ப்பாரா தெரியவில்லை.

‘‘நான் மருத்துவமனையில் இருந்தப்போ என் கணவருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். குழந்தைக்கு ‘ஆயிஷா’னு பேர் வெச்சார். சென்னை வந்து சேர்ந்த பிறகு ரெண்டு, மூணு மாசம் போன்ல பேசிட்டு இருந்தார். அதுக்கு அப்புறம் அவர் பேசவே இல்ல. என் கூட குவைத்ல வேலை பார்த்த நம்ம நாட்டுக்காரங்களும் திரும்பி வந்துட்டதால, அவரைப் பத்தின விவரத்தையும் யார்கிட்டயும் கேட்டுத் தெரிஞ்சுக்க முடியல. அவருக்கு லெட்டருக்கு மேல லெட்டர் எழுதினேன். ஒரு பதிலும் இல்ல. அங்க குண்டுவெடிப்புல இறந்திருக்கலாம்னு சிலர் சொல்றாங்க. அவருக்கு என்ன ஆச்சு, என்னை ஏமாத்திட்டாரா… இல்லை, அவருக்கு எதிர்பாராதது எதுவும் நடந்திருச்சா..? இந்த ஆயுள் முடியுறதுக்குள்ள அவரைப் பார்க்க முடியுமா… தெரியல!’’ – கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது ஃபாத்திமாவுக்கு.

இப்போது ஃபாத்திமா வீட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார். 18 வயதாகும் மகள் ஆயிஷா, கல்லூரி முதல் வருடம் படிக்கிறார்.

‘‘உங்கப்பா என்ன பண்றாங்கனு கேட்கும் போது, ‘அப்பா இல்லை’னு சொல்லுவேன். ‘இறந்துட்டாங்களா?’னு கேட்கும்போது, என்ன பதில் சொல்றதுனு தெரியாம அழுகையா வரும். எங்கம்மாவோட கஷ்டத்தை மட்டுமேதான் பார்த்து வளர்ந்திருக்கேன். நான் வேலைக்குப் போய் அம்மாவை சந்தோஷமா வெச்சுக்கணும். இருக்கீங்களா, இல்லையானே தெரியாத என் வாப்பா… எங்கம்மாவை நீங்க ஏமாத்தியிருந்தா அந்த அல்லா உங்களைத் தண்டிப்பார். ஒருவேளை சூழ்நிலையால பிரிஞ்சு, நீங்களும் எங்களை நினைச்சு தவிச்சிட்டு இருந்தா, அந்த அல்லா நம்மளை ஒண்ணு சேர்க்கணும்!’’ என்று ஆயிஷா சொல்லும்போது… அம்மாவுக்கு கண் ணீர் பொங்க, ஆறுதல்படுத்துகிறார் ஆயிஷா!

விதியின் கேள்விக்கு, நல்ல பதில் கிடைக் கட்டும்!

By

Related Post