பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி மைத்திரிகுணரட்னவை “நாய்” என நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஞானசார தேரர் திட்டியமை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போதே, ஞானசார தேரர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென கோரியுள்ளது.
கொழும்பு கோட்டே நீதவான் திலின கமகே நேற்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 9ம் திகதி கலகொடத்தே ஞானசார தேரர், சட்டத்தரணியை திட்டியிருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் பொலிஸார் இதுவரையில் விசாரணை நடத்தவில்லை என, மைத்திரி குணரட்னவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பௌத்த பிக்கு ஒருவருக்கு எவ்வாறு இந்தளவு அதிகாரம் கிடைக்கப் பெற்றது என சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாக்கு மூலமொன்றை பதிவு செய்துகொள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கலகொடத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர் இதுவரையில் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை என கொம்பனித்தெரு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காரணங்களை கருத்திற் கொண்ட நீதவான், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஞானசார தேரர் வாக்குமூலமொன்றை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.