ஒலுவில் அஷ்ரப் நகரிலிருந்து 2011ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் ஐ தே கட்சி தலைமையிலான இந்த ஆட்சியிலும் மீண்டும் அதே நகரில் மீள் குடியேற்றப்படாமல் தட்டழிந்து திரிவது கவலை தருவதாகும் என உலமா கட்சி தெரிவித்தள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
பல வருடங்களாக ஒலுவில் அஷ்ரப் நகரில் வாழ்ந்த முஸ்லிம்கள் இராணுவ முகாம் அமைக்கப்போவதாக கூறி 2011ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றத்தை அப்போதே பகிரங்கமாக கண்டித்தது உலமா கட்சி மட்டுமேயாகும். முன்னைய அரசாங்கத்தில் பல முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் இத்தகைய பலாத்கார வெளியேற்றத்தை தடுக்க முடியாது போய் விட்டது. இத்தகைய தமது கையாலாகா தனத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவை மட்டும் இவர்கள் குறை கூறினார்களே தவிர அவரது ஆட்சியில் தாமும் மந்திரிகள் என்பதை சுத்தமாக மறந்து போயினர்.
மஹிந்தவின் ஆட்சியில் இருந்த மிகப்பெரிய குறைகளில் ஒன்றுதான் ஒலுவில் அஷ்ரப் மக்கள் வெளியேற்றப்பட்டமையும் அவர்களுக்கு வாழ்வதற்கான மாற்றுக்காணிகள் வழங்கப்படாமையுமாகும். இவ்வாறான குறைகள் காரணமாகவே முஸ்லிம் மக்கள் அணி திரண்டு ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தார்கள். அவ்வாறு ஐ தே கட்சி தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் ஒலுவில் அஷ்ரப் நகர மக்களின் அனாதரவான வாழ்வில் மாற்றம் ஏற்படாமை என்பது ஆட்சி மாற்றம் எத்தகைய மாற்றத்தையும் முஸ்லிம் மக்களுக்கு தரவில்லையா என்ற கேள்வியே எழுப்புகிறது.
வெளியேற்றப்பட்ட அஷ்ரப் நகர ஏழை முஸ்லிம் மக்கள் தாம் வாழ்வதற்கு இடமில்லாத நிலையில் ஒலவிலில் உள்ள அரச காணியில் குடியேறியமைக்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு இன்று அந்த மக்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இவை பற்றி இலங்கையில் உள்ள எந்தவொரு மனித உரிமை நிறுவனமும் குரல் எழுப்பியதாக தெரியவில்லை. அத்துடன் எதிர் கட்சியே இல்லை என்ற அளவு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தும் இந்த மக்கள் மீண்டும் தமது சொந்த வாழ்விடமான அஷ்ரப் நகரில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய வரலாற்று சோகமாகும். இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பல நூற்றுக்கணக்கான காணிகள் விடுவிக்கப்பட்டு அம்மக்களிடம் கையளிக்கப்படும் நிலையில் முஸ்லிம்களின் எந்தவொரு காணியும் இதுவரை மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே ஐ தே க தலைமையிலான இந்த அரசு ஒலுவில் அஷ்ரப் மக்களை அவர்கள் முன்னர் வாழ்ந்த பிரதேசங்களில் மீள் குடியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலமா கட்சி கேட்பதுடன் இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறது.