இலங்கை அனைத்து மக்களுக்கும் தாய்நாடு. நமக்கென்று வேறுநாடுகள் எதுவும் கிடையாது. என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு, தெற்கு – தமிழ், சிங்களம் என்ற பேதம் எம்மிடமில்லை. நாம் அனைவரும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்ற வகையில் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாத்து நாட்டையும் பாதுகாப்போம் என தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டையும் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தையும் காட்டிக் கொடுக்காது கட்டிக் காத்து நாட்டை முன்னேற்றுவோம் என்றும் கேட்டுக் கொண்டார். மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் மகா வித்தியால யத்திற்கான மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடம் நேற்று ஜனாதிபதியினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மாணவிகளின் பல்வேறு கலை கலாசார அம்சங்களுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்தோதய விஞ்ஞான தொழில்நுட்ப வித்தியாலயத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“மொனராகலை பாலாறு விபுலானந்த தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்து இங்கு மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துவிட்டு இங்கு தமிழ் பாடசாலையிலும் அதேபோன்ற மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தைத் திறந்து வைப்பது எமக்கு மகிழ்ச்சி.
வடக்கைப் போன்றே தென்பகுதியிலும் தமிழ் பாடசாலைகளை முன்னேற்றுவது எமது நோக்கமாகும். பிள்ளைகளே! நீங்களே இந்த நாட்டின் எதிர்காலம். இந்த நாட்டின் சிறந்த செல்வங்கள். நீங்கள் அனைவரும் சிறப்பாக முன்னேற வேண்டும். படித்தால் மட்டும் போதாது சிறந்த குண நலன்களைக் கொண்டிருப்பது முக்கியம்.
இந்த வாரத்தில் மாத்திரம் நாம் பல மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடங்களைத் திறந்து வைத்துள்ளோம். இது பெற்றோர்களுக்கல்ல. எமது எதிர்கால சந்ததியர்களான பிள்ளைகளுக்கானது. இந்த நாட்டில் மட்டுமின்றி உலகை வெல்லக்கூடிய மாணவர்களாக உங்களை காண்பதே எமது எதிர்பார்ப்பு.
தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதம் எம்மிடம் கிடையாது. நாம் அனைவரும் இலங்கையில் பிறந்தவர்கள். தமிழ் மக்களே நீங்களும் இந்த நாட்டில் பிறந்தவர்கள் தானே? வெளிநாட்டில் பிறக்கவில்லையே! இதுதான் நம் எல்லோருக்குமான நாடு. எமக்கு வேறு நாடு கிடையாது.
வேறு நாடுகள் தமிழ் மக்களைப் பாரமெடுக்கப் போவதுமில்லை. அதனை மனதிற்கொண்டு நாம் பிறந்த இந்த தாய்த் திருநாட்டை நாம் அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது.
இதனை கருத்திற் கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை நாம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். பிள்ளைகள் ஒழுங்காக கல்வியைக் கற்று முன்னேற அவர்களை தயார்படுத்துவது பெற்றோர்கள் ஆசிரியர்களே.
இந்த விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த முன்னேற்றமடைந்து இங்கிருந்து பல டாக்டர்கள். பொறியியலாளர்கள் ஏனைய துறை நிபுணர்கள் உருவாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தோடு மொழி பயிற்சிக் கூடமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளை இங்கு கற்கக் கூடிய வசதிகளுண்டு. இவற்றை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகைய வசதிகள் தற்போது கிராமப்புறங்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம் இனி கிராமிய பிள்ளைகளுக்கும் சொந்தமாகிறது. 68 ற்கு மேற்பட்ட கணனிகள் இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றாகக் கற்று இதன் மூலம் முழுமையான பிரயோசனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் இங்குள்ள மாணவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
பெற்றோர்களே இது நம் அனைவரதும் தாய்நாடு. இதனை நாம் அனைவரும் இணைந்து பாதுகாப்போம். இந்த நாட்டை முன்னேற்றுவோம்.
அரசாங்கம் எம்மிடம் இருப்பதாலேயே இவை அத்தனையையும் எம்மால் மேற்கொள்ள முடிகிறது. மாகாண சபைகள்.
பிரதேச சபைகள் என அனைத்தும் எம் வசமே உள்ளன. இதன் மூலம் இந்த மாகாணத்தை முன்னேற்றச் செய்து அதன் மூலம் நாட்டையும் முன்னேற்றி உலகை வெற்றிகொள்ள எம்மால் முடியும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு இன்றுள்ள சுதந்திரம் இருக்கவில்லை. அதனை மக்கள் மறக்கமாட்டார்கள். சில இடங்களுக்கு எம்மால் போக முடியாமலும் மக்கள் எம்மை நெருங்க முடியாமலும் இருந்த காலம் இந்த நாட்டில் இருந்தது. நாம் அதனை மாற்றியுள்ளோம்.