2016ம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் நவம்பர் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.
இதன் முன்னோடியாக இம்மாதம் 23ம் திகதி நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது முதலாம் வாசிப்பாகக் கருதப்படும். இதில் ஒவ்வொரு அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடு பற்றிய தரவுகள் இடம்பெற்றிருக்கும்.
அதன்பின்னர் நவம்பர் 20ம் திகதி நிதி அமைச்சரின் வரவு செலவுத்திட்ட உரை இடம்பெறும். இது இரண்டாம் வாசிப்பாகக் கருதப்படும். இதன்போதே வரி அதிகரிப்பு, குறைப்பு, பொருட்கள் விலை அதிகரிப்பு, குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்படும்.
அத்துடன், அரசின் மொத்த வருமானம், மொத்த செலவீனம், துண்டுவிழும் தொகை உள்ளிட்ட தரவுகளும் புள்ளிவிவர ரீதியாக வழங்கப்பட்டிருக்கும்.
மறுநாள் முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகும். இவ்வாறு 14 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு டிசம்பர் 8ம் திகதி இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன்பின்னர் குழுநிலை விவாதம் நடத்தப்படும். இதற்காக 12 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களையும், யோசனைகளையும் முன்வைக்க முடியும். இது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதமாகக் கருதப்படும். இறுதியில் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 22ம் திகதி இடம்பெறும்.