– எஸ்.ரவிசான் –
விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கடந்தக் காலங்களில் எமது நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று முழுவதுமாக ஒத்துழைப்பு தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வெறுமனே இவர்களை மட்டும் அரசியல் கைதிகளாக எந்த ஒரு விசாரணைகளும் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் தமக்கான விடுதலையினை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
எமது நாட்டில் கடந்தகாலங்களில் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கையின் போது எமது இராணுவ வீரர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது எமது நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தனர். இவ்வாறான நிலையில் விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்களும்; கேபி என குறிப்பிடப்படும் குமரன் பத்மநாதன் உட்பட சில உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படும் போது இவர்களை மட்டும் எவ்வித விசாரணைகள் இன்றி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்ற செயல் என்றே குறிப்பிட வேண்டும்.