இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொதுமக்களுக்கோ நாட்டிற்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை திட்டவட்டமாக நான் கூறுகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்படவிருந்த பாரதூரமான அறிக்கையை மாற்றியமைப்பதற்கு புதிய அரசாங்கத்தினால் முடிந்தது. இருந்தபோதிலும் முன்னைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அறிக்கை மிகவும் காரம் கூடியதாக அமைந்திருக்கும். அதிலிருந்து நாம் நாட்டை பாதுகாத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை,முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகளை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைத்தமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இதனை அறிவுறுத்தாமையை நினைத்து நான் மிகவும் வருந்துகின்றேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவை அரலகன்வில விலயாய மகா வித்தியாலயத்தில் சனிக்கழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் முன்னர் நடைபெற்ற அணிசேரா மாநாட்டிற்கு 117 நாடுகளின் தலைவர்கள் எமது நாட்டிற்கு வருகை தந்தனர். எனினும் அந்த மாநாட்டிற்கு பின்னரான காலப்பகுதியல் எமது அரசாங்கம் மிகவும் மோசமானதும் தரமற்றதுமான வெ ளிநாட்டு கொள்கையின் காரணமாக வல்லரசு நாடுகளின் எதிர்ப்பிற்கு உள்ளாகியது. இதனால் பல்வேறு விளைவுகளுக்கு எமக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
எனினும் ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் ஆட்சி பீடமேறியவுடன் அனைத்து நாடுகளுடன் சுமூகமான உறவினை நாம் கட்டியேழுப்பினோம். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொது சபை கூட்டத்தொடரில் நான் கலந்து கொண்ட போது அதிகமான நாட்டு தலைவர்களையும் என்னால் சந்திக்க முடியாமல் போனது. அதனை நினைத்து நான் வருந்துகின்றேன் எனினும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் முக்கியமான தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினேன்.
சர்வதேச நாடுகளுடன் சுமூகமான உறவினை வளர்த்தமைக்கு நான் மாத்திரம் காரணம் அல்ல. அரசாங்கம் என்ற அனைவரும் பொதுவான தொரு வேலைத்திட்டத்தை நோக்கி பயணித்தமையினாலேயே இந்த வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு முடிந்தது.
இதேவேளை எந்த நாடுகளுடன் உறவினை கட்டியெழுப்பினாலும் எமக்கு பிரச்சினை இல்லை. இலங்கையில் மனித உரிமைகள், நல்லாட்சி, மற்றும் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதுடன் ஊழல் மோசடிகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றே ஐக்கிய நாடுகள் அமைப்பு் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
முன்னைய காலங்களில் தேர்தல்களின் போது இரண்டு பிரதான கட்சியினர்களிடையே எவ்வாறான பிரச்சினைகள் எழுந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசியல் மோதல்களினால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்,? எத்தனை வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன? ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் வேளைகளில் அரச சேவையிலிருந்து எத்தனை பேர் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்? அரசியல் இடமாற்றம் மிகவும் சகஜமாக இடம்பெற்று வந்துள்ளது. எனினும் புதிய ஆட்சியின் போது குறித்த கலாசாரத்திற்கு முடிவுக்கட்டி பொது இலக்கினை வெற்றி கொள்வதற்கு இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
இந்நிலையில் அரசியல் பழிவாங்கல்களுக்கு முடிவுக்கட்டி புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்ற கட்சி பேதங்களினால் அடித்துக்கொண்டு உயிரை பணயம் வைப்பதா? என்பதனை மக்கள் முடிவு செய்யவேண்டும். அரசியல் பழிவாங்கல் யுகத்திற்கு முடிவுக்கட்ட வேண்டும்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறு அரசியல் கட்சிகள் ரீதியான பிளவுகள் ஏற்படுவதில்லை. மிகவும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுகின்றது. அவ்வாறான சூழலை நாம் இலங்கையில் ஏற்படுத்துவதற்கு நாம் தயராகியுள்ளோம். இதனூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது பிரதான நோக்கமாகும்.
ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்படவிருந்த பாரதூரமான அறிக்கையை மாற்றுவதற்கு எம்மால் முடிந்தது. இருந்தபோதிலும் முன்னைய அரசாங்கம் தொடந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும். அதிலிருந்து நாம் நாட்டை பாதுகாத்துள்ளோம்.
இலங்கை இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையால் பொதுமக்களுக்கோ நாட்டிற்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை திட்டவட்டமாக கூறுகின்றேன்.
நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்ததின் போது இராணுவ வீரர்களின் பங்களிப்பு அளப்பரியது. எனினும்முன்னாள் இராணுவ தளபதிகள் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக நான் அறிந்தேன். உடனடியாக அது தொடர்பில் விசாரித்துப் பார்த்தேன். அது வெ ளிநாட்டு தூதுவர்களாக இருந்த இராணுவ அதிகாரிகள் குறித்த விசாரணையென்று அறிந்துகொண்டேன் எனினும் இவ்வாறு விசாரணைக்கு அழைத்தமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது. பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் எனக்கு அறிவுறுத்தவுமில்லை. இந்த செயற்பாட்டை நினைத்து நான் வருந்துகின்றேன்.
அத்தோடு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் காணப்பட்ட அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுவிற்கும் பாராளுமன்றத்திற்கும் வழங்கியுள்ளோம். தற்போது நாட்டில் எவரும் காணாமல் போவதில்லை, வெள்ளை வேன் கலாசாரம் இல்லை,அரசியல் கொலைகள் இல்லை. எனினும் அரசாங்கத்தின் சிறிய பிரச்சினைகளை எடுத்துகொண்டு சில அரசியல் சக்திகள் குறை கூறிவருகின்றன. இதனை நாம் நிராகரிக்கின்றோம்.
ஆகவே நாடு என்ற வகையில் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்வதற்கு அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.