Breaking
Sat. Nov 16th, 2024

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் குறித்த குடும்பம் வசித்த வீட்டை தாக்கிய போது வீடு உடைந்த நிலையில் அதனுள் இருந்த மனைவி உயிரிழந்துள்ளார்.

இதன்போது யானையின் தாக்குதலில் இருந்து தப்ப முனைந்த கணவரும் யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூதுரை பிறப்பிடமாகவும் நெல்லிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.மோகனதாஸ் (30வயது)  அவரது மனைவியான நெல்லிக்காட்டை சேர்ந்த எம்.சுயமலர் (17வயது) ஆகியோருமே யானையின் தாக்குதலில் உயிரிழந்ததாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகி 10 மாதங்களேயான நிலையில் குறித்த பெண் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேநேரம் நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் இருந்த இரு வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் பயன்தரு மரங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதகாலத்தில் இப்பிரதேசத்தில் யானையின் தாக்குதல்கள் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பட்டிப்பளை பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் படுவான்கரைப் பகுதியில் யானையின் தாக்குதல் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கடந்த வாரம் வெல்லாவெளி பிரதேசத்தில் யானையின் தாக்குதலை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியதன் அடிப்படையில் யானையொன்று பிடிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post