முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தான் புகழ்ந்து பேசுவதை ஐ.ம.சு.மு. வினால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு தான் எப்போதும் தயாராகவிருப்பதாகவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (20) செவ்வாய்க்கிழமை தனது ஜப்பான் விஜயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார். இதன்போது அவர்,
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பான் நீதிபதியான மொடோ றகூசியை அழைத்திருந்ததை ஜப்பானின் பிரதமர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்து மகிந்தவின் அந்த முயற்சியை பாராட்டினார்.
இதன்போது முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் ஏதோ கருத்துகளைக் கூறினார். இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை புகழ்ந்து பேசும் போது நீங்கள் எதிர்ப்பது ஆச்சரியமான விடயமல்ல. ஆனால் உங்கள் தலைவர் மகிந்த ராஜபக்ஷவை புகழ்ந்து பேசினாலும் எதிர்ப்பது தான் ஆச்சரியமாகவுள்ளது. மகிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு நான் எப்போதும் தயாராகவுள்ளேன். ஆனால் நான் புகழ்வதை நீங்கள் விரும்பவில்லை. உங்களை புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.