மத்திய கொழும்பு பிரேமதாஸ வைத்தியசாலையின் ஒரு பகுதியை மாளிகாவத்தையிலுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவோடு இணைப்பது குறித்து தீர்மானித்துள்ள யோசனையிணை மீளாய்வு செய்யுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
குறைந்த வருமானம் பெறும் மத்திய கொழும்பு மக்களின் சுகாதார நலன்களை கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலையின் ஊடாக மத்திய கொழும்பு வாழ் சுமார் 30,000 மக்கள் நாளாந்தம் தமக்கு தேவையான சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர்.
அத்தோடு கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது உங்களின் வெற்றிக்கு மத்திய கொழும்பு மக்கள் அளித்த பங்களிப்பினை நன்கு அறிவீர்கள்.
நல்லாட்சியில் அனைத்து மக்களுக்குமான சீரான சுகாதார சேவைகளை பெற்றுக்கொடுப்பது குறித்து நீங்கள் வாக்குறுதியளித்திருந்தீர்கள்.
மாளிகாவத்தை பிரேமதாஸ வைத்திய சாலையின் ஒரு பகுதியை மாளிகாவத்தை சிறுநீரக சிகிச்சை பிரிவுடன் ஒன்றிணைப்பது குறித்த யோசனைவிட குறித்த வைத்திய சாலைகளை அபிவிருத்தி செய்வது குறித்து கரிசனை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
1994 ஆம் ஆண்டிற்கு பின்னர் எவ்விதமான அபிவிருத்தியையும் கண்டிராத இவ்வைத்தியசாலையினை நவீனமயப்படுத்தி மக்கள் சேவையினை இலகுபடுத்துமாறு வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.