கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் அமைக்கப்பட்டு வந்த வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முஹைதீன் குறித்த தடையுத்தரவை நீக்குவதாக அறிவித்தார்.
இதன்போது, குறித்த வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கடந்த 2014.08.18ஆம் திகதி தன்னால் வழங்கப்பட்ட 14 நாட்களுக்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக நீதிபதி அறிவித்ததுடன், குறித்த வாகனத் தரிப்பிடம் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வருகின்ற மக்கள் மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என்றும் வெளியார் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான வடக்குப் பகுதியில் பொருத்தமற்ற இடத்தில் வாகனத் தரிப்பிடம் அமைக்கப்படுவதாகவும், அதனால் பள்ளிவாசலைச் சேர்ந்த பொது மக்களுக்கு இடையூறும் பாதிப்பும் இழப்புகளும் ஏற்படுவதுடன் பள்ளிவாசலின் மகிமைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டு, இந்த நிர்மாணப் பணிகளை தடை செய்யக் கோரி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(AD)