டெஸ்மன் சில்வா அறிக்கை என்று எதுவும் கிடையாது. அவர் மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் ஆலோசகராக மாத்திரமே பணியாற்றியுள்ளார். இருந்தும் அவரது இரண்டு கடிதங்கள் திருடப்பட்டிருப்பதாக அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் இல்லாத ஒன்றை உருவாக்கி ஊடகங்களில் செய்தி வெளியீடு நீடிக்குமானால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்காவின் தீர்மானம் ஆகியவற்றின் மீதான சபை ஒத்துவைப்பு வேளை விவாதம் இடம்பெற்றது.
விவாதம் ஆரம்பமாவதற்கு முன்பதாக எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரின் அனுமதியுடன் விசேட கூற்று ஒன்றினை முன்வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு மேலும் கூறுகையில்,
உடலாகம மற்றும் மெக்ஸ்வல் பரணம் ஆகியோரது அறிக்கைகளை நான் சபையில் சமர்ப்பித்திருந்தேன். எனினும் டெஸ்மன் சில்வா அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. நானும் இதனை ஊடகங்களிலேயே அறிந்தேன். இதன் பின்னர் நான் டெஸ்மன் சில்வாவுடன் தொடர்பு கொண்டு விடயங்களைக் கேட்டறிந்து கொண்டேன்.
இதன் பிரகாரம் டெஸ்மன் சில்வா அறிக்கை என்று ஒன்றும் கிடையாது. அவர் எந்த அறிக்கையும் தயாரிக்கவில்லை. ஆனாலும் அவர் மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் ஆலோசகராக இருந்துள்ளார். மேலும் அவரது இரண்டு கடிதங்கள் திருடப்பட்டிருக்கின்றன. இந்த தகவல்களை அவரே என்னிடம் கூறினார்.
மேலும் திருடப்பட்ட கடிதங்களை வைத்துக் கொண்டே ஊடகங்களிலும் செய்திகளை வெளியிடுகின்றனர். பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்குமாறு கோருகின்றனர்.
இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி செயற்படுவதும் ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவதும் தொடருமானால் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.