Breaking
Fri. Nov 15th, 2024
-Mohamed Fairooz-
திருகோணமலை, கருமலையூற்று பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ள இந்திய உத்தர பிரதேச தப்லீக் ஜமாஅத் குழுவினரையும் உள்ளூர்வாசிகளையுமே படத்தில் காண்கிறீர்கள்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள கருமலையூற்று பிரதேசத்தில் அமைந்திருந்த 400 வருட பழைமை வாய்ந்த ஜும்ஆ பள்ளிவாசலானது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் படையினரால் முற்றாக இடித்து நிர்மூலமாக்கப்பட்ட பிற்பாடு அக் காணியில் சதுர வடிவான மிகச் சிறிய கட்டிடம் ஒன்று பள்ளிவாசல் எனும் பெயரில் படையினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட முதல் வாரம் மாத்திரம் ஜும்ஆ தொழுகை நடாத்தப்பட்டது. பின்னர் அங்கு ஐவேளை தொழுகையோ ஜும்ஆவோ நடைபெறுவதில்லை.
இந்நிலையில் அங்கு சுற்றுலா நோக்கில் விஜயம் செய்வோர் இடவசதி இல்லாததன் காரணமாக வெளியிலேயே தொழுகையில் ஈடுபட வேண்டியுள்ளது. அவ்வாறு தொழுகையில் ஈடுபடுவோரையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.
கருமலையூற்று பள்ளிவாசல் மற்றும் அப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான கள விஜயம் ஒன்றை கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூறா ஞாயிற்றுக்கிழமை (25)  ஏற்பாடு செய்திருந்தது. இந்த விஜயத்தில் நானும் பங்கேற்றேன். அதன்போதே இந்தக் காட்சி என் கமெராவில் பதிவானது.
இப் பிரதேசத்திலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும். முஸ்லிம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பள்ளிவாசலுக்குச் செல்வதற்கான பிரதான பாதை திறக்கப்பட வேண்டும். பள்ளிவாசல் புதிதாக, விசாலமாக நிர்மாணிக்கப்பட வேண்டும். அப் பகுதியில் ஊற்றெடுக்கும் நீரை பிரதேச மக்கள் தடையின்றிப் பெற வழிவகுக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதி உயிர்ப்பிக்கப்படும். இன்றேல் அது வெறும் சுற்றுலாத் தளமாகவே இருந்துவிட்டுப் போகும்.

By

Related Post