ஏதேனும் ஓர் குற்றச் செயல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் நபர் ஒருவரை தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெற்றுக் கொள்ள எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் சட்டத்தில் இடமில்லை.
சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் விஞ்ஞான ரீதியான காரணிகளின் அடிப்படையிலான சாட்சியங்களையும் பயன்படுத்தி விசாரணை நடத்தப்பட முடியும்.
சந்தேக நபர் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அது குறித்து பொலிஸ் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபர் அல்லது மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
சட்ட மீறல்களில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும்.
சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என ருவான் குணசேகர கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர்களை தாக்க கூடாது என சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.