மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்படவுள்ள விசாரணை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை பங்கெடுக்கச் செய்ய வேண்டுமென நான் எனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை.
மாறாக தேவையெனில் விசாரணை செயற்பாட்டில் வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரையையே முன்வைத்தேன் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார்.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த இறுதி அறிக்கையை தயாரித்த போது எனக்கு எந்தவிதமான சவாலும் இருக்கவில்லை. உண்மையைக் கூறுவதற்கு யாருக்கும் பயப்படவேண்டியதில்லை என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே அறிக்கையை தயாரித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும்,
தான் இந்த விடயத்தில் சுயாதீனமாக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்தவாரம் வெளியிடப்பட்ட அவரது அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மெக்ஸ்வல் பரணகம மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை மற்றும் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணை என்பவற்றை விடவும் பாரதூரமானதாக பரணகம அறிக்கை காணப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த அறிக்கை தயாரிப்பு தொடர்பில் தற்போது பிரான்ஸுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மெக்ஸ்வல் பரணகம தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்:
எமது ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஆணைக்கு அமையவே இந்த அறிக்கையை முழுமையாக தயாரித்து அரசாங்கத்திடம் வழங்கினோம். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த இறுதி அறிக்கையை தயாரித்த போது எனக்கு எந்தவிதமான சவாலும் இருக்கவில்லை.
உண்மையைக் கூறுவதற்கு யாருக்கும் பயப்படவேண்டியதில்லை என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே அறிக்கையை தயாரித்தேன். குறிப்பாக வெ ளிநாட்டு நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென நான் பரிந்துரை செய்யவில்லை.
அதாவது வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கையின் விசாரணை செயற்பாட்டில் உட்படுத்தவேண்டும் என்றோ அவர்களை விசாரணை செயற்பாட்டில் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்றோ நாங்கள் அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை. மாறாக தேவையெனில் விசாரணை செயற்பாட்டில் வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தேன். குறிப்பாக நாங்கள் எமது விசாரணை செயற்பாட்டில் வெளிநாடுகளின் உதவிகளை பெற்றோம். விசேடமாக டெஸ்மன்ட் சில்வாவின் ஆலோசனையை பெற்றோம். அதுபோன்று அரசாங்கம் தேவையெனின் சர்வதேச தொழில்நுட்ப உதவிகளை பெற முடியும். அதனையே நான் எனது அறிக்கையில் முன்வைத்துள்ளேன்.
மேலும் எமது ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த விடயத்தில் சுயாதீனமாகவே நான் செயற்பட்டேன். எனக்கு ஒரு பொறுப்பு வழங்கும் போது அது சுயாதீனமாக செயற்படுவேன். அதன் அடிப்படையிலேயே இந்த அறிக்கையையும் தயாரித்து வழங்கினேன் என்றார்.