Breaking
Wed. Jan 15th, 2025
புனித ஹஜ் கடமைக்காக சட்டபூர்வ ஆண் பாதுகாவலர் இன்றி 45 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்களை அழைத்துவரும் விமான சேவைகள் மீது சவூதி அரேபிய சிவில் விமான போக்குவரத்து சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டை மீறும் விமான சேவைகள் மீது 50,000 சவூதி ரியால் (17,35000 ரூபா) அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று ஆண் பாதுகாவலர் இன்றிவரும் யாத்திரிகர்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படாது அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விதியை மீறும் விமான சேவைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவது மட்டுமன்றி கட்டுப்பாட்டை மீறி ஹஜ் கடமைக்கு வரும் பயணிகள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படும்வரை விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தங்கியிருக்கும் காலத்திற்கான செலவையும் குறித்த விமான சேவை ஏற்கவேண்டி வரும்.
யாத்திரிகர்களின் போக்குவரத்து நடவடிக்கை குறித்து சவூதி சிவில் விமான போக்குவரத்து சபை ஆண்டுதோறும் வெளியிடும் எச்சரிக்கை அறிவுறுத்தல் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருக்கும் ஹஜ் முகவர்களே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஜித்தாவில் இருக்கும் ஹஜ் நிறுவனம் ஒன்றின் நிறைவேற்று அதிகாரி ஒருவர் விபரித்துள்ளார். இந்த முகவர்கள் ஹஜ் அமைச்சு வெளியிடும் சட்ட விதிகளை மீறுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
“இவ்வாறான ஹஜ் முகவர்கள் சட்டபூர்வமான எந்த ஆண் துணையும் இன்றி உத்தியோகபூர்வ பத்திரங்களில் பெண்களின் பெயர்களை இணைக்கிறார்கள். தமது குழுவில் இருக்கும் ஆண் ஒருவரது பெயரை பாதுகாவலராக இடுகிறார்கள்.
இதனால் குறித்த பெண்ணுக்கும் ஆண் பாதுகாவலருக்கும் இருக்கும் உறவுமுறையை நிரூபிக்க கடினமாக உள்ளது. இந்த முகவர்களுக்கு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை.
ஆண் பாதுகாவலர் இன்றி வரும் பெண் யாத்திரிகர்களுக்கான பயண செலவை அதிகரிக்கும் இவ்வாறான ஹஜ் முகவர்கள் ஏதாவது ஒரு பெயரை குறித்த பெண்ணின் சட்டபூர்வ பாதுகாவலராக இடுகிறார்கள். இதற்கு பெரும்பாலான பெண்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
இது எமது கட்டுப்பாட்டை மீறியிருக்கிறது என்று மேற்படி அதிகாரி சவூதி கஸ்ஸட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Post