சவூதியில் போதைப் பொருள் விற்ற மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் தலைகளை வாளால் துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம், அரசு செய்தி நிறுவனமான எஸ்.பி.ஏ.வுக்கு செவ்வாய்க்கிழமை அளித்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள விவரம்,
சிரியாவைச் சேர்ந்த ஹமூத் ஹஸன், ஹஸன் முஸல்மானி, யூசுப் அல்ஹல்கி ஆகிய மூவரும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை ஏராளமான அளவில் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் தலை வாளால் வெட்டப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மூவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதோடு, இந்த ஆண்டு சவூதியில் மரண தண்டனை எண்ணிக்கை 44 ஆகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரையிலான கால அளவில் 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதில் பில்லி சூனியத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்களும் அடங்குவர்.
பாலியல் தாக்குதல், கொலை, ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபடுவது, போதைப் பொருள் விற்பனை – சவூதியில் மரண தண்டனைக்கு உரிய குற்றங்களாகும்.