Breaking
Mon. Dec 23rd, 2024
– ஏ.எச்.எம்.பூமுதீன் –
அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது.
யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி மு.கா அம்மக்களை ஏமாற்றி விட்டது.
பொதுத்தேர்தலின்போது நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கெல்லாம் சென்ற ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டி அம்மக்களின் வாக்குகளை சூரையாட பெரும் கைங்கரியங்களை எல்லாம் மேற்கொண்டார்.
அதிலும் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வந்த ரவூப் ஹக்கீம, தேசியப்பட்டியல் வாக்குறுதிக்கெல்லாம் அப்பால் சென்று அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளியில் வைத்து குர்ஆன் மீது சத்தியம் செய்தவராக அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நியமனத்தை உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து அம்பாறை மாவட்டத்தில் முதற்தடவையாக களமிறங்கியிருந்த  அ.இ.ம.காவின் பக்கம் பெருவாரியாக சாய்ந்திருந்த அட்டாளைச்சேனை பிரதேசம் ஹக்கீமின் வாக்குறுதியை அடுத்து முகாவின் பக்கம் அலைமோதியது.
சுமார் 25 தேசியப்பட்டியல் வாக்குறுதிகளை 25 முஸ்லிம் கிராமங்களுக்கு வழங்கியிருந்ததாக தேர்தல் பிரச்சார மேடைகளின்போது எதிர்தரப்பினரால் விமர்சனம் செய்யப்பட்டது.
தேர்தல் வேளையின்போது மு.கா.வின் பிரதான எதிரியாக காணப்பட்ட அ.இ.ம.கா, ஹக்கீமின் இந்த வாக்குறுதிகளை கடுமையான விமர்சனம் செய்தது. பொய் வாக்குறுதிகளை நம்பவேண்டாம் என மக்களை எச்சரித்தது.
எனினும், மக்கள் அ.இ.ம.காவின் விமர்சனத்தை ஏற்காது மு.கா.வுக்கே வாக்களித்தது.
அட்டாளைச்சேனைக்கு பிரச்சாரத்திற்காக சென்ற றிஷாத் பதியுதீன் அங்கு இடம்பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தின்போது அட்டாளைச்சேனைக்கு ஒருபோதும் தேசியப்பட்டியல் நியமனம் கிடைக்காது. ஹக்கீம் உங்களை ஏமாற்றுகின்றார். நம்பாதீர்கள் என்று றிஷாத் முழங்கியபோது அவரை நோக்கி சரமாரியான கல்லெறித் தாக்குதலை நடத்தினர் மு.கா. தரப்பினர்.
சுகாதார அமைச்சராக தற்போது நியமனம் பெற்றிருக்கும் நசீரின் நெருங்கிய ஆதரவாளர்களாலேயே றிஷாத் மீதான இந்த கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஐ.தே.க சின்னத்தில் முகா சார்பில் போட்டியிட்ட 03 வேட்பாளர்களினதும் சொந்த ஊர்களிலும் றிஷாத் மு.காவை கடுமையாக விமர்சித்து உரையாற்றிருந்த போதிலும் அங்கு அவருக்கு எந்தவிதமான கல்லெறித் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால், பொய் வாக்குறுதியை நம்பிய அட்டாளைச்சேனை மக்கள் கல்லெறித் தாக்குதல் நடத்தியதன் மூலம் மு.காவின் தேசியப்பட்டியல் என்பது எமக்கு நிச்சயம் உறுதியானது என்ற அளவுக்கு உறுதியான நிலைப்பாட்டில் இருந்திருந்தார்கள் என்பதையே அது எடுத்துக்காட்டுகின்றது.
ஜூலை 27ம் திகதி றிஷாத் மீது கல்லெறிந்த அதே அட்டாளைச்சேனை மக்களுக்கு சரியாக 03 மாதங்களின் பின்னர் ஒக்டோபர் 27ம் திகதி  மு.காவின் தேசியப்பட்டியல் வாக்குறுதி என்பது வெறும் பொய் ஏமாற்று வித்தை என்பதை இறைவன் எடுத்துக்காட்டியிருக்கின்றான்.
அட்டாளைச்சேனையில் கல்லெறிக்கு உள்ளாவதற்கு சற்று நிமிடங்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு றிஷாத் பதியுதீன், பள்ளிவாசல் கட்ட நிர்மானப் பணிக்கென ரூபா 05 இலட்சத்தை வழங்கி வைத்துவிட்டே அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி கல்லெறியும் பட்டார்.
றிஷாத் மீதான கல்லெறி என்பது அப்போது மு.கா. போராளிகளாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது. அட்டாளைச்சேனை மக்களை நோக்கி ஏனைய பிரதேச மு.கா. போராளிகள் கடும் விமர்சனைத்தையும் முன்வைத்தனர்.
அட்டாளைச்சேனையில் கல்லெறிக்கு உள்ளான றிஷாத் பதியுதீன் அங்கிருந்து நேராக மருதமுனைக்கு சென்றபோது மிவும் மனம் உடைந்தவராக காணப்பட்டார்.
அட்டாளைச்சேனை மக்கள் என்கண்முன்னே ஏமாற்றப்படுகிறார்கள்; இதற்கு இடம் கொடுக்க முடியாது. நான் உண்மையைக் கூறியபோது, நான் பொய் சொல்வதாக கூறி என்மீது கற்களை வீசினர்.
நிச்சயமாக நான் சொன்னதுதான் உண்மை என்பதை அவர்கள் தேர்தலின் பிற்பாடு உணர்ந்து கொள்வார்கள் என மிக வேதனைப்பட்டவராக மருதமுனை மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அல்லாஹிவின் நாட்டம் – ஒட்டுமொத்த அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமுகத்தின் சாபம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்போது றிஷாத் பதியுதீனின் கூற்றை உண்மைப்படுத்தியுள்ளது.
அட்டாளைச்சேனை மக்களும் இப்போது வேதனைப்பட்டவர்களாக றிஷாத் பதியுதீனை அனுதாப நோக்கில் பார்க்க எத்தனித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் செயற்படும் மு.கா. தலைவரின் நெருக்கமான குழுவொன்று கிழக்கு சுகாதார அமைச்சென்பது அட்டாளைச்சேனை மக்களுக்கு வழங்கப்பட்ட போணஸ் பதவி என்றும் ,இறுதி இரண்டரை வருடங்களுக்கு எம்பிப் பதவி நிச்சயம் வழங்கப்படும் என்றும் இப்போது அட்டாளைச்சேனை மக்களை மீண்டும் ஒரு தடவை ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
எனவே, இறுதியாக அட்டாளைச்சேனை மக்கள் இன்னும் இன்னும் மு.காவின் ஏமாற்று வித்தைகளுக்கு அடிபணியாது மாகாணங்களிலேயே குறைவான நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக் கொள்ளும் மற்றும் அதிகாரங்கள் குறைந்த இந்த கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவிக்கு சோரம் போகாதும் இனிவரும் காலங்களில் முகாவின் இந்த தில்லுமுல்லுகளை அறிந்து சமயோசிதமாக அரசியல் முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை அட்டாளைச்சேனையில் உள்ள புத்திஜீவிகள் மத்தியில் பேசப்படும் ஒரு விடயமாக இன்று எழுந்துள்ளது.

By

Related Post