Breaking
Thu. Jan 16th, 2025
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தின் பேரழிவில் சிக்கி இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் 2012-ம் ஆண்டில் சர்வதேச ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது போரினால் பாதிக்கப்பட்ட இந்த நாட்டை சீரமைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. ஆனால் இஸ்லாமிய ஷெபாப் போராளிகளின் தொடர் தாக்குதல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் தலைநகரின் உள்ளேயே நிலவும் பட்டினி நெருக்கடிகளும் அரசின் சாதனைக்கான தடையாகவே அறியப்படுகின்றது.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை ஒன்றில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சோமாலியா மக்கள் பஞ்சத்திற்கு ஒருபடி குறைவான நெருக்கடி அல்லது அவசரமான சூழ்நிலைகளில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடானது ஜனவரியில் எடுக்கப்பட்டதைவிட ஐந்தாவது உயர்வீட்டினைக் குறிக்கின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பகுப்பாய்வு பிரிவு, அமெரிக்க நிதி பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு பஞ்சத்திற்குப் பின் சோமாலியாவில் மெதுவாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் மறுபடியும் அங்கு குறைந்த மழை அளவு, மோதல், வர்த்தகத் தடைகள் மற்றும் குறைக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளால் மோசமான உணவு பாதுகாப்பு நிலைமைக்கு வழி வகுத்துள்ளது. குழந்தைகளிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகின்றது.
43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பசியால் இறக்கும் ஆபத்தை எதிர்கொண்டிருக்க, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏழில் ஒன்று என்ற கணக்கில் சுமார் 2,18,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Post