நிராயுதபாணிகளாக பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அத்தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறிய உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார்.
அத்துடன் சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதா நல்லாட்சியின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாட நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் விசேட வினாக்களை எழுப்புகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த 29 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாட நெறி மாணவர்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் அனைத்தையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாட நெறி மாணவர்கள் தமது பட்டத்தை பல்கலைக்கழக பட்டத்துக்கு இணையானதாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுத்து ஊர் வலமாக வந்தனர்.
அவர்களின் இந்தக் கோரிக்கை முன்னர் கடந்த கால ஆட்சியில் சுற்றறிக்கை மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும் கடந்த ஆட்சியாளர்கள் அதனை மீளப் பெற்றுக் கொண்டு இரத்து செய்தனர்.இதனை மீண்டும் அமுல்படுத்துமாறு கோரியே மாணவர்கள் அமைதியாக நிராயுதபாணிகளாக ஊர்வலம் வந்தனர்.அவர்கள் அடி தடி வன்முறைகளில் ஈடுபடவில்லை.
ஊர்வலமாக வந்த மாணவ மாணவிகளின் கைகளில் எந்தவிதமான ஆயுதமோ கற்களோ, தடிகளோ இருக்கவில்லை.அவர்கள் அங்கு போடப்பட்டிருந்த வீதித் தடைகளை அகற்றவே முனைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சப்பட்டதுடன் கண்ணீர் புகை குண்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டது.கடுமையான தாக்குதல்களையும் பொலிஸார் இதன்போது மேற்கொண்டனர்.மாணவர்கள் பின்வாங்கிய போதும் பொலிஸார் அவர்களை விரட்டி விரட்டி தாக்கினார்கள்.
இதனால் பல மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.பொலிஸார் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டனர்.சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களே சட்டத்தை மீறிவிட்டனர். இதுதான் நல்லாட்சியின் விளைவா?
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.இத்தாக்குதலுக்கு உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரிகள் இத்தாக்குதலை தடுக்கத் தவறிய பொலிஸ் உயரதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
இலங்கையில் இலவசக் கல்வி வழங்கப்படுகின்ற போதும் அதனால் வேலைவாய்ப்புகள் கிடைக்காது விட்டால் என்ன பயன்?வடக்கு கிழக்கு மாணவர்களில் வேலையில்லாப் பிரச்சினை மோசமாகவுள்ளது. வேலையில்லாப் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். எனவே ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களையாவது உருவாக்கப்பட வேண்டும் என்றார்.