Breaking
Sun. Dec 22nd, 2024

– ஏ.எச்.எம்.பூமுதீன் –

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது.

அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைசசரவை கூட்டம் ஆரம்பமானபோது வழமையான அமைச்சரவை பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான அங்கிகாரங்கள் மற்றும் கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றதன் பின்னர் எழுந்து நின்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியை நோக்கி ‘ வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில கருத்துக்களை இங்கு நான் முன்வைக்க விரும்புகின்றேன். இதற்கு சகலரும் எனக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் தாராளமாக உரையாற்றுங்கள் என அனுமதி வழங்கினர்.

றிஷாத் பதியுதீன் இங்கு கருத்து வெளிப்படுத்தும்போது ‘ வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டன.

இந்த நிமிடம் வரை அவர்கள் மிகவும் துயரமான வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் என்னால் முடிந்த அளவும் எனது காலத்தில் பதவி வகித்த அரச உதவிகளைக் கொண்டும், வெளிநாட்டு முஸ்லிம் தனவந்தர்களின் உதவியைக் கொண்டும் அம்மக்களின் தேவைகைள் பூர்த்தி செய்வதற்கு கடுமையாக உழைத்துள்ளேன்.

வடமாகாண முஸ்லிம்கள் குறிப்பாக வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இதுவரை மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தரவுகள், மீள்குடியேற உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கைகள் தொடர்பில் அவ்வப்போது புதிய அறிக்கைளை தயாரித்த வண்ணம் அந்தந்த அரசாங்களினதும் மீள்குடியேற்ற அமைச்சர்களிடமும் சமர்ப்பித்து வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால், இங்கு வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெனில் கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பங்கு கொண்ட நிகழ்வில் தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சரான சுவாமிநாதன் வெளிப்படுத்திய கருத்துக்கள்.

அந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சுவாமிநாதன் ‘ இன்னும் 02 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே வன்னியில் மீள்குடியேற வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இது எமக்கு மிகவும் வேதனையை அளிக்கின்றது. இது மிகவும் தவறான தரவுகளாகும். நான் வழங்கிய தரவுகளை பார்த்திருந்தால் இவ்வாறு சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆனால், அந்த இடத்தில் சுவாமிநாதன் கூறிய கருத்தை மறுதலித்துப் பேச யாரும் முன்வராமையிட்டும் இச்சந்தர்ப்பத்தில் வேதனைப்படுகின்றேன்.

இதன்போது குறிக்கிட்ட சுவாமிநாதன் ‘ அமைச்சர் றிஷாத் அவர்களே எனக்கு கிடைத்த தரவுகளை வைத்துத்தான் அவ்வாறு நான் குறி;ப்பிட்டேன்’ என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த றிஷாத் பதியுதீன் ‘ இல்லை அமைச்சர் அவர்களே!அவ்வப்போது உண்மையான புதிய தரவுகளை அரசாங்க அதிபருக்கு சமர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அதனை அரசாங்க அதிபரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.’ என்று கூறியபோது மீண்டும் குறிக்கிட்ட சுவாமிநாதன் ‘நான் அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு உண்மைத் தரவுகளை அறிய முயற்சி செய்கின்றேன்.’ என பதிலளித்தார்.

இதன்பிற்பாடு மீண்டும் அமைச்சரவை கூட்டத்தில் கருத்த வெளியிட்ட றிஷாத் பதியுதீன் முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் திட்டமிட்ட அடிப்படையில் மழுங்கடிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இது விடயத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தமது சகோதர இனம் என்று கூட பார்க்காமல் இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தி அக்காணிகள் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் என முரண்பாடுகளை தோற்றுவித்து வருகின்றனர்.

இவ்வாறு மீள்குடியேறவும் முடியாமல் மீள்குடியேறுவதற்கான எந்த உதவியும் கிடைக்காமல், மீள்குடியேறச்சென்றால் தமது சொந்தக் காணிகளும் இல்லாமல் மிகவும் துயரான ஒரு வாழ்க்கையை இந்த நிமிடம் வரை வடமாகாண முஸ்லிம்கள் அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டும் விவாதித்துக் கொண்டுமிருந்தபோது மறுபக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன றிஷாத் பதியுதீனின் இந்த ஆதங்கமான பேச்சுக்களை மிக அமைதியான முறையில் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது உரையின் இறுதியில் ஜனாதிபதியை நோக்கி ‘ ஜனாதிபதி அவர்களே முஸ்லிம்கள் உங்களை நம்புகின்றனர். வடமாகாண முஸ்லிம்கள் விடயத்தில் நீங்கள் அதீத அக்கரை செலுத்த வேண்டும். அவர்களின் 25 வருட துயர வாழ்க்கைக்கு மிக குறுகிய காலத்திற்குள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு இறுதியில் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரி ‘றிஷாத் அமைச்சரே ‘ உங்கள் கருத்துக்கள் எனக்கு ஆழ்ந்த சிந்தனையே ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவாக விசேட குழுவொன்றை அமைத்து வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளை தீர்த்து வைக்க உரிய நடவடிக்கையை நான் எடுப்பேன் என உறுதியளித்ததுடன் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடம் காணப்பட்ட ஆதங்கங்களையும் அவரிடம் காணப்பட்ட கொந்தளிப்புக்களையும் ஆசுவாசப்படுத்தி அவரை அமைதி அடையச் செய்தார்.

இதன்பிற்பாடு அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதியை கௌரவப்படுத்துவதற்கு சற்று அமைதியடைந்ததுடன் வேறு சில கருத்துப் பறிமாறல்களின் பின்னர் அமைச்சரைவ கூட்டம் நிறைவு பெற்றதாக தெரியவருகின்றது.

By

Related Post