Breaking
Sat. Mar 15th, 2025
ஊவா மாகாணசபை தேர்தலில் நாங்கள் ஒன்றுபட நேர்ந்ததற்கு அரசாங்கமோ, ஐக்கிய தேசியக்கட்சியோ காரணமல்ல. முஸ்லிம்களுக்கெதிராகத் தலைதூக்கியுள்ள தீவிரவாத அமைப்புகளின் செயற்பாடுகளே எங்களது ஒற்றுமைக்கு வழிகோலியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டையிலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பதுளை சைமன் பீரிஸ் நகர மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த ஊவா மாகாணசபை தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இரண்டு கட்சிகளின் தலைவர்களாகிய நானும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் ஒற்றுமைப்பட்டு ஜனநாயக ஐக்கிய முன்னணியில் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு ஏனைய கட்சிகளுக்கு ஒருவிதமான கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பிரதான பத்திரிகைகள் இந்தத் தேர்தலில் எங்கள் கட்சிகள் இரண்டினதும் ஒருமித்த தீர்மானத்தை பல்வேறுவிதமாக சித்திரிக்கின்றன. என்னையும், அமைச்சர் ரிஷாத்தையும் சம்பந்தப்படுத்தி கேலிச்சித்திரங்கள் வரைகின்றன. நாங்கள் விகடகவிகளாக பார்க்கப்படுகின்றோம்.
ஒருபோதுமே ஒன்றுபட முடியாதவர்கள் என கருதப்பட்டுவந்த அமைச்சர்களாகிய நாம் ஒன்றுசேர்ந்திருப்பதை சகிக்கமுடியாத சக்திகள், இழிவான வார்த்தை பிரயோகங்களை கூட கையாள தலைப்பட்டுள்ளன.
இவ்விரண்டு கட்சிகளையும் ஒன்று படுத்திய மாற்றுச்சக்தி எதுவென்ற கேள்வி நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் எழுந்துள்ளது. நாங்கள் ஒன்று பட்டுள்ளது ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தலாம் என்று ஆளுங்கட்சி நினைப்பதை போல, நாங்கள் அரசாங்கத்தின் அடியாட்களென ஐ.தே.க தவறான கருத்தை கூறி வருகின்றது. நாங்கள் ஒன்றுபட நேர்ந்ததற்கு அரசாங்கமோ , ஐக்கிய தேசியக்கட்சியோ காரணமல்ல. முஸ்லிம்களுக்கெதிராக தலைதூக்கியுள்ள தீவிரவாத அமைப்புகளே எங்களது ஒற்றுமைக்கு வழிகோலியது.
தலைமைத்துவம் என்ற புனிதமான சமூகப் பொறுப்பை சுமந்து கொண்டிருக்கிற நாம், அடுத்தகட்ட அரசியல் ஆபத்தை சந்திப்பதற்கு முஸ்லிம்களை தயார் படுத்துகின்ற கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கின்றோம்.
பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் அரசாங்கத்தில் சேர்ந்த மறுநாளே கல்முனையில் நடந்த கூட்டம் ஒன்றில் இரவில் விழுந்த படுகுழியில் கண்ணை மூடிக்கொண்டு பகலில் விழுந்ததாக நான் கூறியிருந்தேன். பின்னர், அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொடுத்துவிட்டு நாங்கள் கஷ்டப்படுகின்றோம்.
பரீட்சார்த்தமாக நாங்கள் பதுளை மாவட்டத்தில் ஒற்றுமைப்பட்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறோம். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூதாயமும் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
பதுளை மாவட்டத்தில் நாங்கள் ஒரு புதிய யுகத்துக்கு அடியெடுத்து வைத்திருக்கிறோம். அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய முன்வந்திருக்கிறோம். அதனால் ஆட்சி நடுக்கம் காண வேண்டும்.
தேசியமட்ட முக்கிய தேர்தலுக்கான முஸ்தீபுகள் மிக அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் எமது நிலைப்பாட்டை நாம் தௌிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
தெற்கில் நடந்த மாகாண சபை தேர்தலில் ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை. ஜே.வி.பியும், சரத்பொன்சேக்காவின் கட்சிக்கும்தான் அங்கு வாக்களிப்பில் அதிகரிப்பு காணப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டு முறை ஆட்சியில் அமர்த்துவதற்கு நான் பெரும் பங்களிப்பை செய்திருக்கின்றேன். ஆனால், அக்கட்சியினர் பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
அசாத்சாலி கைது செய்யப்பட்ட பொழுது அதற்கெதிராக நான் பாதுகாப்பு செயலாளரோடு வாதாடினேன். அப்பொழுது நீதி அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுவதாக கூறினேன். அசாத்சாலியை அவ்வாறு கைது செய்ய முடியுமானால் ஏன் ஞானசார தேரரை கைது செய்ய முடியாது. அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சுக்குள்ளேயே அத்து மீறி பிரவேசித்து அட்டகாசம் செய்தவருக்கு அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு எந்தத்தரப்பு ஒத்தாசையாக இருக்கிறதோ அந்தத் தரப்புக்கு எங்களது ஒற்றுமையின் பலத்தைப் புரிய வைக்க வேண்டும்.
நாங்கள் அரசாங்கத்தினதோ எதிர்க்கட்சியினதோ எடுப்பார் கைப்பிள்ளையல்ல. நாங்கள் சமூகத்தின் நலனுக்காக பாடுபடுபவர்கள் எனவும் தெரிவித்தார்.

Related Post