காவல் துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
காவல்துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நியமன உத்தரவு நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலேயே, ஒரு திருநங்கை காவல்துறையின் துணை ஆய்வாளர் என்ற பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
தமிழக காவல்துறையின் துணை ஆய்வாளராக அவரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தலைமையிலான அமர்வு பிறப்பித்துள்ள இது தொடர்பான உத்தரவில், திருநங்கையான பிரித்திகா யாஷினி, காவல்துறையில் பணிபுரியும் தகுதி வாய்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வரும் காலங்களில், காவல்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் மூன்றாவது பாலினத்தவர் கலந்து கொள்ள ஏதுவான தேர்ச்சி முறைகளை பின்பற்றவும் அது தொடர்பான துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள தீர்ப்புக்கு மாற்று பாலினத்தை சேர்ந்தவர்களின் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரிக்கத் தேவையான சட்டதிருத்தங்களை கொண்டுவரும்படி, இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது.
இந்தியாவில் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கைகளின் எண்ணிக்கை, நாடளவில் 4.87 லட்சம் என, மத்திய அரசு முதன் முறையாக கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிட்டிருந்த கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களில் தான் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் தமிழகத்தில் வசிக்கும் 22,364 பேரில் 10,909 பேர் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களில் 11,455 பேரும் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.