தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தனது பதிலை வழங்கவுள்ள நிலையில் உண்ணாவிரதமிருக்கும் கைதி கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பலத்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருக்கின்றனர்.
நீண்டகாலமாக நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை ஆட்சிமாற்றத்தின் பின்னர் வலியுறுத்தி வந்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
ஐந்து தினங்களின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மகசின் சிறைச்சலைக்குச் சென்று நேரில் வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதத்தை கைதிகள் இடைநிறுத்தியிருந்தனர்.
இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமையையடுத்து கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில் கடந்த வியாழக்கிழமையன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வன் தலைமையிலான மாகாண அமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர். இச்சந்திப்பின்போது கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் வடக்கு முதல்வர் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைவாக சில அரசியல் பிரச்சினைகள் காணப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் அவர்களின் கோப்புக்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தன்னிடத்தில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதனையடுத்து கைதிகளின் விடயத்திற்கு உரிய பதிலை இன்று வழங்குவதாகவும் அவர் உறுயளித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு உரிய பதிலை வழங்குவார் என நம்பிக்கை கொண்டிருப்பதாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளும், அவர்களது உறவினர்களும் எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.