ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய இந்த இலங்கை வந்துள்ளது.
ஐரோப்பாவின் இந்தக் குழு கடந்த 12ஆம் திகதி கொழும்பு வந்தது. நால்வரடங்கிய இந்தக் குழுவில் இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித்தொழிலை எதிர்த்துப் போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரியில் நிறைவேற்றியிருந்தது.
சட்டவிரோதமான வகையில் இடம்பெறும் மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை நிறுத்தவேண்டும் என்று நான்கு ஆண்டுகளாக தீவிரமான பேச்சு இடம்பெற்றன. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனைகளுக்கு அப்போதைய அரசு (மஹிந்த அரசு) செவிசாய்க்கவில்லை. இதனாலேயே இலங்கையின் கடலுணவு ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது.
சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய மீன்பிடித்தொழிலில் ஈடுபடாத நாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதில்லை எனும் கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்தது.
உரிய அனுமதியின்றி ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் படகுகளைத் தடுத்து நிறுத்துவது, அப்படியான தொழிலை நெறிமுறைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, சர்வதேச மீன்பிடிச் சட்டங்களுக்கு உட்பட்டு தொழிலைச் செய்வது, செய்மதி கண்காணிப்பு என்பது உட்பட மேலும் சில நிபந்தனைகளே ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி நெறிமுறையை உரிய வகையில் பின்பற்றுவதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளையும் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிருந்தது. இந்நிலையிலேயே ஐரோப்பிய குழுவின் இலங்கைப் பயணம் அமைந்துள்ளது.