Breaking
Thu. Nov 14th, 2024

இலஞ்ச மற்றும் ஊழல் தொடர்பில் கடந்த ஆட்சியில் 6,000 முறைப்பாடுகளும், தற்போதைய ஆட்சியில் 4,000 முறைப்பாடுகளும் என மொத்தமாக 10, 000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த, இலஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றும், அதனாலேயே விசாரணைகள் தாமதமடைவதாகவும் தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாட்சிகளைத் தம்மிடம் வழங்குமாறும், சாட்சி வழங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பை வழங்க தாம் உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த மாதம் 09 ஆம் திகதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாகும். இதை நாம் சிவில் அமைப்புகள், சட்டத்தரணிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து கொண்டாடவுள்ளோம். இதன்போது பேரணியொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில நடைபெறும் இந்த நிகழ்வில், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்க்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம். இலஞ்ச, ஊழலைத் தடுப்பது மட்டுமன்றி அதை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் இதன்போது உறுதிப்பிரமாணம் ஒன்றும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் எமக்குத் தெளிவாக முறைப்பாடு செய்யுமாறு அரச அதிகாரிகளிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம். தொலைபேசி, தொலைநகல் (பெக்ஸ்), மின்னஞ்சல் (ஈமெய்ல்), தபால் மூலமாக முறைப்பாடுகளை எமக்குத் தெரியப்படுத்தலாம். 07.03.2015 ஆம் திகதி முதல் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனால், சாட்சிகளை எம்மால் பாதுகாக்க முடியும். உங்களைப் பாதுகாக்க நான் உத்தரவாதம் வழங்குகின்றேன். அதேபோல் மக்களும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யலாம். நீங்கள் அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பினூடாகத்தான் எமது செயற்பாடுகளை வினைத்திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும். இந்த வருடத்துக்குள் அரச அதிகாரிகள் தொடர்பில் 4, 000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேவேளை, கடந்த ஆட்சிக் காலத்தில் 6,000 முறைப்பாடுகள் என மொத்தமாக 10,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளை விசாரிப்பதற்குப் போதுமான மனித வளம் எம்மிடம் இல்லை. இலஞ்ச, ஊழல் விசாரணைப் பிரிவில் 46 பேரும், சொத்து, உடைமை பிரிவில் 21 பேரும் மற்றும் ஏனைய பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமாக 157 பேர் மட்டுமே உள்ளனர்.
எனவே, இந்தப் பாரியளவான முறைப்பாடுகளை இவர்களை வைத்துக் கொண்டு விசாரணை செய்ய முடியாது. 800 பேர் அளவில் தேவை. அதற்கான அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவ டிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொதுமக்களும் முறைப்பாடுகளைச் செய்ற்வதற்கு புதிய இணைதளம் ஒன்று டிசம்பர் 9 இல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனூடாக பொதுக்கள் முறைப்பாடு செய்யலாம். தவறான முறைப்பாடுகள் வழங்கப்படுமாயின், முறைப்பாட்டை வழங்குபவர் 10 வருட சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விடயத்தில் பொதுமக்கள் எம்முடம் நேரடித் தொடர்புகளைப் பேண வேண்டும். அப்போதுதான் எமது செயற்பாடுகளை வினைத்திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்றார்.

By

Related Post