Breaking
Sun. Dec 22nd, 2024
அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருமாறும், மாகாணங்களில் காணப்படுகின்ற 15000திற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடத்திற்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திய கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பில் நாளை (18) நடைபெறவுள்ளதாக ஒன்றிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த 7 மாத காலமாக தாம் பொறுப்பு கூற வேண்டிய அனைத்து தரப்பினருடனும் தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கான தீர்வு எட்டப்படாத நிலையில், குருநாகல் நகரில் கடந்த ஐந்தாம் திகதி தொடர் உண்ணாவிரத போராட்டமொன்றை தாம் ஆரம்பித்திருந்ததாகவும், இன்று 14 நாட்கள் கடந்துள்ள போதிலும்,

பொறுப்பு கூற வேண்டியவர்கள் இதுவரை கலந்துரையாடல்களை நடாத்தவில்லை எனவும் அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடமேல் மாகாணத்தில் 3400, மேல் மாகாணத்தில் 3000, மத்திய மாகாணத்தில் 2000, கிழக்கு மாகாணத்தில் 2600, வட மாகாணத்தில் 2500, ஊவா மாகாணத்தில் 1000,

வடமத்திய மாகாணத்தில் 500, தென் மாகாணத்தில் 382, சப்ரகமுவ மாகாணத்தில் 1000 என்ற அடிப்படையில் மாகாண சபை பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், தேசிய ரீதியில் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக ஒன்றிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதி்லும், அரசாங்கம் அமைச்சரவைக்காக பாரியளவிலான நிதியை தேவையற்ற விதத்தில் செலவிட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்பிரகாரம், உடனடி வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தரும் விதத்தில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டையில் நாளை (18) நண்பகல் 12 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post