ஜனாதிபதிகள் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதென்றால் பொதுவாக அவர்களிடம்தான் செய்தியாளர்கள் கேள்வி கேட்பார்கள், ஆனால், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, சீன கோடீஸ்வர வர்த்தகரான ஜக் மாவை செவ்வி கண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் அரசாங்க – வர்த்தக உறவுகள் தொடர்பான கலந்துரையாட லொன்றில் பங்குபற்றினார்.
சீனாவின் பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலி பாபா நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜக் மா மற்றும் பிலிப்பைன்ஸின் இளம் தொழலதிபர் ஆகியோரிடம் ஒருவரிடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கேள்விகளை கேட்டார்.
இதன்போது, இளம் தொழிலதிபர்களுக்கு அரசாங்கங்கள் எவ்வாறு உதவலாம் என ஜக் மாவிடம் கேள்வி எழுப்பினார் ஜனாதிபதி ஒபாமா. “சிம்பிள்…. வரிகளை குறைக்க வேண்டும்.
அல்லது வரிகளை நீக்க வேண்டும்” என ஜக் மா பதிலளிக்க சபையில் பலத்த சிரிப்பும் கரகோஷமும் எழுந்தது. அதையடுத்து “சக பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளீர்கள்” என ஜக் மாவிடம் ஜனாதிபதி பராக் ஒபாமா சிரித்துக்கொண்டே கூறினார்.
அதிகம் அறியப்படாத பிலிப்பைன்ஸ் இளம் தொழிலதிபரான அய்ஸா மெய்ஜினோவும் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றினார். பொறியியலாளரான இந்த யுவதி ஒரு பேராசிரியர் ஆவார். உப்பு நீரில் இயங்கும் விளக்கை கண்டுபிடித்தவர் இவர். அய்ஸாவின் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு ஜக் மாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை கூறினார்.