Breaking
Sun. Sep 22nd, 2024
– ஏ.எச்.எம்.பூமுதீன் –
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றம் தொடர்பான உள்ளக விசாரணையினை 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவரிடமே றிஷாத் பதியுதீன் நேற்று இந்த வேண்டுகோள் பத்திரத்தை கையளித்தார்.
உள்ளக விசாரணை என்பது ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு அமைவானது. ஆனால், ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின் விசாரணைக்காலமானது 2001 லிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இதன் போது சுட்டிக் காட்டினார்.
2001ஆம் ஆண்டுக்கு முன்புதான் முஸ்லிம் சமுகம் மிக அதிகாமாக பாதிக்கப்பட்ட காலங்கள் உள்ளன. காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப்பொத்தானை உட்பட முஸ்லிம் பகுதி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
1990ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியாக குறிப்பிடப்படும் அதே நேரம், இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புலிகளால் துரத்தியடிக்கப்பட்டதும் இந்த காலப்பகுதியிலே தான் என்று விளக்கம் கொடுத்தார்.
இவ்வாறு சமந்தாவுக்கு பூரண விளக்கம் அளிந்த ரிசாத் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டமை, அவர்களின் துரித மீள்குடியேற்றம், இலங்கையின் உள்ளக விசாரணையின் ஆரம்பகாலம் 1985லிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும், இலங்கையில் அகதிகளாக வாழும் முஸ்லிம்களை பழைய மற்றும் புதிய அகதி என வேறுபாடு காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கி முஸ்லிம் சமுகம் தொடர்பான விரிவான மகஜர் ஒன்றையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சந்திப்பின் இறுதியில் சமந்தாவிடம் கையளித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சமந்தாவுடனான சந்திப்பு நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. சமந்தாவின் இலங்கை விஜய நிகழ்ச்சி நிரலில் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய அ.இ.ம.கா தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கொழும்பில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அமெரிக்க கண்காட்சி அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரிசாத் பதியுதீன் , அந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட அமெரிக்க தூதுவரிடம் இலங்கை முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் சமந்தாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.
இதன் பிற்பாடு சமந்தா நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த அன்றைய தினம் இரவு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் சமந்தாவுக்கான உத்தியோகபூர்வ விருந்து உபசார வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ரிசாத் பதியுதீன் அமெரிக்க தூதுவரை சந்தித்து தனது வேண்டுகோளை மீண்டும் நியாபகப் படுத்தினார்.
இதனையடுத்து விருந்துபசார நிகழ்வின் போதே சமந்தாவையும் சந்தித்தார் ரிசாத் பதியுதீன்.
இதன் போது தங்களை சந்திக்க எமக்கு நேரம் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என சமந்தாவிடம் நேரடியாக கேட்டுக் கொண்டதன் அடுத்தே நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நான் மற்றுமொரு முஸ்லிம் கட்சித் தலைவராக உள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் எனஅனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதற்காவது நேரம் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என  ரிசாத் பதியுதீன் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.
அதற்கமைய நேற்றைய சந்திப்பில் அ.இ.ம.கா தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீன் கட்சியின் தவிசாளர் பிதியமைச்சர் அமீர் அலி சிரேஸ்ட சட்டத்தரணி என்.எம்.சஹீட் ஆகியோரும் முகா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முகா பிரதித் தலைவரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் ஆகியோரும் பங்குகொண்டனர்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சின் போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடுவது போன்று முஸ்லிம் பிரதிநிதிகளிடமும் கலந்துரையாடப்பட வேண்டும். இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை மேசையில் அரசு – தமிழ் சமுக பிரதிநிதிகள் போன்று முஸ்லிம் சமுக அரசியல் பிரமுகர்களும் சரி சமனாக அமர வேண்டும் என்றும் நேற்றைய சமந்தாவுடனான சந்திப்பின் போது கலந்து கொண்ட முஸ்லிம் பிதிநிதிகள் வலியுறுத்தினர்.

By

Related Post