ஐந்து கோடி ரூபா நட்டஈடு கோரி கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த நஷ் ஈடு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமே கோரப்பட்டுள்ளது.
மினுவன்கொட கொட்டாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சேயா செவ்தம்னி என்ற ஐந்து வயது சிறுமி கொலையுடன் எவ்வித தொடர்பையும் பேணாத தம்மை சில நாட்கள் தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் பீ.ஆர்.என்.ஆர். நாகஹாமுல்ல, புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த ரட்நாயக்க, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
32 வயதான குறித்த நபரை பொலிஸார் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலைக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாம் இந்தக் குற்றச்செயலை செய்யவில்லை என பல தடவைகள் கூறிய போதிலும் அதனை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை என துனேஸ் பிரியசாந்த, தமது மனுவில் சட்டத்தரணி ஊடாக தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தம்மை குற்றவாளி என பல தடவைகள் ஊடகங்களில் அடையாளப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் நடவடிக்கைகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி உந்துல் பிரேமரட்ன இந்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.