கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக் ரஹ்மான் மற்றும் பாடசாலை அதிபர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.
இங்கு அமைச்சர் மேலும் கருத்துரைக்கையில்,
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படல் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு சமாந்தரமாக பாடசாலைகளின் வளங்களின் தேவைப்பாடுகளும் காணப்படுகின்றது.
மாணவ சமூகத்தின் கல்வியில் அதிகம் நாம் கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். குறிப்பாக நாடு தழுவிய முறையில் 488 தமிழ் மொழி மூல பாடசாலைகளில், 28000 க்கு மேற்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைகளை நாம் நடத்திவருகின்றோம்.
அதில் ஒரு கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 16 பாடசாலைகளுக்கு முன்னோடி பரீட்சைகளுக்கான வினாப்பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களை அச்சமின்றி தயார் நிலையில் வைக்க முடியும்.
தலைநகர் கொழும்பில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடு, அதனோடு இணைந்த பரீட்சையின் பின்னரான அவர்களின் எதிர்காலம் என்பன தொடர்பில் எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள், மாகாண, மாநகர சபையின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் இதன்போது கேட்டுக்கொண்டார்.