இளமையும், துடிப்பும் கொண்ட ஒரு அரசியல் தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுதீனை காணுவதாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ள பங்களாதேஷின் அவாமி லீக் ஆளும் கட்சியின் தலைமைத்துவ சிரேஷ்ட உறுப்பினர் காசி சபருள்ளா கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீனை நேற்று (03) வியாழக்கிழமை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் சூழல் இந்த நாட்டின் உண்மையான ஜனநாயகத்தினை எடுத்தியம்பும் ஒன்றாக காணமுடிந்ததாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை முஸ்லிம் மட்டுமல்லாது ஏனைய சமூகங்களினாலும் பாராட்டப்படுகின்ற ஒரு தலைவராக இந்த அரசாங்கத்தில் தாங்கள் காணப்படுவது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் காசி சபருள்ளா கூறினார்.
பங்களாதேஷ் இலங்கையின் மிக நட்புள்ள நாடு என்ற வகையில் இரு தரப்பு வர்த்தக செயற்பாடுகள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும் பங்களாதேஷின் ஏற்றுமதி 34 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளதாக குறிப்பிட்டார். அதேபோல் இலங்கையில் புதிய முதலீடுகளுக்கான ஆர்வத்தை பங்களாதேஷ் கொண்டுள்ளதாகவும் அதற்கான அடிப்படை வசதிகளை பெறுவது தொடர்பில் தமது நாடு ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் குறிப்பிட்டார்.
அதேவேளை, பங்களாதேஷின் நடப்பு அரசியல் விவகாரம் தொடர்பில் தாங்கள் கொண்டுள்ள அறிவு தொடர்பில் தான் மகிழ்ச்சியுறுவதாகவும், எதிர்காலத்தில் தங்களது அரசியல் செயற்பாடுகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க தமது கட்சியின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவாமி லீக்கின் சதலைமைத்துவ சபை சிரேஷ்ட உறுப்பினர் காசி சபருள்ளா அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பின்போது பங்களாதேஷின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தாரிக் அஹ்ஸன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.