பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் வருகை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
மேலும், யுத்தத்தின் போது இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிகளவான உதவிகளை வழங்கியதாக நினைவூட்டிய ஜனாதிபதி அதை தாமும் தமது நாட்டு மக்களும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையின் போது பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமையையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.
தேசிய மற்றும் சர்வதேச உறவுகளை பாகிஸ்தானுடன் மேற்கொள்வதில் தாம் பெருமையடைவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாகிஸ்தான் நாட்டு மக்களும், பாகிஸ்தான் அரசாங்கமும் எமது நாட்டிற்கு சிறந்த நண்பர்கள் என தெரிவித்தார்.
அத்துடன் இரண்டு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தம் நோக்கில் இரண்டு நாடுகளுக்கிடையில் 8 உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டப்பட்டதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.