இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நேரடி நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண உடையில் பங்கேற்றுள்ளார்.
இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் இவ்வாறு பங்கேற்றுள்ளார்.
அண்மைய வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேரடியாக வருகை தந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய அமைச்சர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள் கூட வானொலி நிகழ்ச்சிகளுக்கு கலையகத்திற்கு சென்றதில்லை எனவும், வீடுகள் அலுவலகங்களிலிருந்தே பங்கேற்றிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் மற்றும் சில சிரேஸ்ட அதிகாரிகள் தவிர்ந்த ஏனையவர்கள் எவரும் ஜனாதிபதி நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்பது பற்றி அறிந்திருக்கவில்லை.
தாம் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் இந்தக் காலப்பகுதியில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் ஆகிய பல்வேறு முனைகளில் பாரியளவு மேம்பாடு பதிவாகியுள்ளது என நேரடி நிகழ்ச்சியில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சிக்காக சென்றிருந்த ஜனாதிபதி அதே உடையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கலையகத்திற்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.