குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை வழங்க முடியாது என அமெரிகக் நீதிபதியொருவர் தீர்ப்பளித்துள்ளார்.
குரங்கு ஒன்றினால் பிடிக்கப்பட்ட செல்பீ புகைப்படங்களுக்கான பதிப்புரிமை அக்குரங்குக்கே உரியது எனவும் அதன் கையில் கெமரா கிடைப்பதற்கு வழிவகுத்த மனிதருக்கு உரியதல்ல எனவும் பிரகடனப்படுத்தக் கோரி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மிருகங்கள், பிராணிகளின் நலன்களுக்காக செயற்படும் PETA அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய புகைப்படப்பிடிப்பாளர் டேவிட் ஸ்லேட்டர் 2011 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவின் சுலாவெஸி தீவுக்குச் சென்றபோது இப்புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன.
6 வயதான நரூட்டோ எனும் குரங்கின் கெமராவை கைப்பற்றியபின், மேற்படி குரங்கின் செல்பீ படங்கள் கெமராவில் பதிவாகின.
அப்படங்களை தனது நூலொன்றில் டேவிட் ஸ்லேட் டர் வெளியிட்டார்.
இந்நிலையில், மேற்படி புகைப்படங்களுக்கான பதிப்புரிமை டேவிட் ஸ்லேட்டருக்கு உரியதல்ல எனவும், அவ்வுரிமை அப்புகைப்படங்களை பிடித்த குரங்குக்கே உரியது எனவும் பிரகடனப்படுத்துமாறு PETA அமைப்பு நீதிமன்றத்தை கோரியது.
இது தொடர்பாக PETA அமைப்பு வெளியிட்ட அறிக்கையொன்றில், “எமது வாதம் சாதாரணமானது. மிருகங்கள் காப்புரிமையைக் கொண்டிருப்பதை அமெரிக்க பதிப்புரிமை சட்டம் தடுக்கவில்லை.
நரூட்டோவே அப்படங்களை பிடித்தது. எனவே, அதற்கே காப்புரிமை உள்ளது” என வாதிட்டது.
ஆனால், தான் புகைப்படம் பிடிப்பதற்காக கெமரா பொருத்தப்பட்ட ட்ரைபொட் உபகரணத்தை வைத்துவிட்டு சில நிமிடங்கள் அப்பால் நகர்ந்தபோது, மேற்படி குரங்கு கெமராவை கைப்பற்றிக்கொண்டு ஓடியதாக டேவிட் ஸ்லேட்டர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் PETA வெற்றிபெற்றால், மனிதர் அல்லாத உயிரினமொன்று, பொருளொன்றின் உரிமையாளராக பிரகடனப்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பமாக அமைந்திருக்கும்.
இதனால் ஏராளமானோரின் கவனத்தை இந்த வழக்கு ஈர்த்திருந்தது.
இந்நிலையில், குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை வழங்க முடியாது என இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த வாரம் (6) தீர்ப்பளித்துள்ளார்.