Breaking
Sat. Jan 11th, 2025
ஐஎஸ் இயக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர்கள் உள்ளனர் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
சிரியா, இராக் ஆகிய நாடுகளை இணைந்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய நாடு அமைக்கப்போவதாக கூறி அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக ஆயதப் போராட்டத்தில் ஐஎஸ் வாதிகள் குதித்துள்ளனர். இவர்கள் சிரியா மற்றும் இராக்கை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர். இந்தியாவில் இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் சென்று இந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஐஎஸ் இயக்கத்தில் உள்ள அமெரிக்கர்கள் குறித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் ஸ்டீவ் வார்ன் கூறியது: சுமார் 100 அமெரிக்கர்கள் ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து சிரியாவில் செயல்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் இவர்களுக்கு எந்தெந்த இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை. சிரியாவில் ஐஎஸ்  இயக்கத்தில் இணைந்து போரிட்ட அமெரிக்க இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
ஐஎஸ் இயக்கத்தில் இணைவதற்காக அமெரிக்காவில் இருந்து சிரியா செல்ல முயன்ற சிலரை அந்நாட்டு உளவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலரும் ஐஎஸ் இயக்கத்தில் உள்ளனர். இவர்கள் மீண்டும் நாடு திரும்பி உள்நாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புள்ள தாக கருதப்படுகிறது. எனவே  இயக்கத்தில் தொடர்பில் உள்ளனர் என்ற சந்தேகம் ஏற்பட்டால் கூட அவர்களின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

Related Post