எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டீ.டப்ளியூ.சி.தர்மரத்ன மற் றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எம்பிலிபிடிய நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் பிரசன்ன பெர்ணான்டோ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு எம்பிலிபிடிய பகுதியில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது, பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படு காயமடைந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்களைக் கைது செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைதுசெய்து அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எம்பிலிபிட்டியவில் குறித்த விருந்துபசாரத்தின்போது மூன்று மாடிக் கட்டிடத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மரண விசாரணைகள் நேற்று மூன்றாவது நாளாகவும் எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றன. இதன் போதே நீதிவான் மேற்படி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
நேற்றைய விசாரணைகளின் போது, உயிரிழந்த இளைஞரின் மனைவி சாட்சியம் அளித்தார். இதன்போது உதவி பொலிஸ் அத்தியட்சர் தர்மரத்ன, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட டயஸ் ஆகியோர் மீது தமக்கு சந்தேகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதனையடுத்தே நேற்று(27) வழங்கப்பட்ட சாட்சியங்களுக்கு அமைவாக சந்தேக நபர்களை கைதுச் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக குற்றம் சாட்டப்படும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய விசாரணைகளின்போது பொலிஸ் தினைக்களம் சார்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் சுயாதீனமாக மன்றில் ஆஜராகியிருந்தனர். இந் நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருந்துபசாரத்தில் பொலிஸார் மதுபானம் கேட்டதாகவும் அதனை வழங்க மறுத்த காரணத்தினால் இந்த மோதல் வெடித்ததாகவும் அதன் போது குறித்த இளைஞர் பொலிஸாரால் மாடியில் இருந்து தள்ளி வீழ்த்தி கொலை செய்யப்பட்டதாக ஒரு தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்ட காரணத்தினால் பொலிஸார் அந்த இடத்திற்கு சென்றதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
எனினும் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பொலிஸார் அங்கு தாமாகவே சென்றுள்ளதுடம் எவரும் விருந்துபசாரம் குறித்து முறைப்பாடளிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந் நிலையிலேயே நேற்று மன்றில் வெளிப்படுத்தப்பட்ட சாட்சியங்களுக்கு அமைய உதவி பொலிஸ் அத்தியட்சர்இ தலைமை பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸாரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.