ஐநாவின் புதிய மனித உரிமை ஆணையாளராக வந்துள்ள இளவரசர் ஸெய்த் அல் ஹுசைனுடன் இலங்கை விவகாரத்தை விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமை ஆணையக விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என புதிய ஆணையாளர் தெரிவித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்தி பற்றி கருத்து கேட்கையில் அமைச்சர் ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
ஐநாவின் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார் என்பதை இலங்கை அரசு ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தியிருந்தது என்றும், புதிய மனித உரிமை ஆணையாளர் அப்படி இருக்கமாட்டார் என்று இலங்கை அரசு நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.