சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு மனித உரிமைகளை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அலகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதியமைச்சர் பிரபா கணேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேநேரம், மனித உரிமையானது சிறிய நாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக மாறியிருப்பதைத் தடுப்பதற்காக இவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அதேநேரம், ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கும் ஒரு அமைப்பாக மாறிவிட்டது. இவ்வாறானதொரு அமைப்பில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் அரசாங்கம் இணங்கமாட்டாது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன. அந்த நாடுகளுக்கு எமது பிழையற்ற நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கூறியுள்ளோம்.
நவநீதம் பிள்ளையோ அல்லது புதிய ஆணையாளரோ இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பின்னர் அதற்கான பதிலை நாம் வழங்குவோம். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையொன்றை கொண்டுவரும் அளவுக்கு எந்தவிதமான பிழையையும் அரசாங்கம் மேற்கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு சரியானதொரு வரைவிலக்கணத்தை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க வேண்டும் என இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.
மேலைத்தேய நாடுகளுக்கு எதிராக செயற்படுகின்ற மத அமைப்புகள் சிலவற்றை மாத்திரமே பயங்கரவாத அமைப்பு என்றும் ஏனையவற்றை விடுதலை இயக்கம் என்றும் சித்தரிக்கின்றனர்.
பயங்கரவாதம் என்பதற்கு சரியானதொரு வரைவிலக்கணம் உருவாக்கப்பட வேண்டும். இதனையே நாம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தொடர்ந்தும் கோரி வருகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.