ஐ.எஸ். கள் பிடியில் இருக்கும் பகுதிகள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்திவரும் நிலையில், அரபு நாடுகளின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ். களின், அரசியல் ரீதியாகவும், ராணுவத்தைக் கொண்டும் அடக்க அனைத்து அரபு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக அரபு நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் நபில் அல்-அரபி அறிவித்துள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகளின் மாநாட்டுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நபில் அல்-அரபி கூறியதாவாது:-
ஈராக்கில் தற்போது அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். வாதிகள் ஒரு நாட்டின் தலைமைக்கு மட்டும் அச்சுறுத்தலாக விளங்கவில்லை. அந்த நாட்டின் அமைவிடத்துக்கே அவர்கள் ஆபத்தை விளைவிக்க முயன்று வருகின்றனர்.
ஐ.எஸ். உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இன்றைய மாநாட்டின்போது அனைத்து அரபு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக, சர்வதேச நாடுகளின் எல்லா வகையிலான உதவிகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.