புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களில் மக்கள் ஆச்சரியப்படும் தீர்மானங்கள் நீதிமன்றத்தில் எடுக்கப்படலாம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை ஊழல், மோசடிகள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட விசாரணைகள் நடந்து முடிந்துள்ளதுடன் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் நியமிக்கப்படாமல் இருந்ததால், விசாரணைகளை நடத்திய பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை.
புதிய சட்டமா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதால், அடுத்த வாரங்களில் அனுமதிகள் கிடைக்கும் எனவும் அதனடிப்படையில் வழக்குகள் தொடரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே வெலிகடை சிறைச்சாலையில் உள்ள முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறைக்கூடங்களை சுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இந்த சிறைக்கூடுகளில் ஒன்றிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உட்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்படவிருப்பதாக தெரியவருகிறது.