உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லையென அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடையாமையினாலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் காலை பிடித்து இழுப்பது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனக்கு அரசியல் ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த அவர், மக்களுடன் மாத்திரமே தனக்கு ஒப்பந்தங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் மத்திய செயற்குழு எடுக்கும் தீர்மானத்திற்கு கீழ்படிந்து நடப்பர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எப்போது கட்சியைப் பற்றி நினைப்பதுடன் கட்சியின் சுக, துக்கங்களில் உடனிருந்தார் எனவும் அமைச்சர் பைசல் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.