கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நேற்று (25) பாம்பொன்று காணப்பட்டதனால் பதற்றம் நிலவியுள்ளது.
நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அநேகமாக பூர்த்தியாகியிருந்த போதிலும் அலுவலக நடவடிக்ககைள் இடம்பெற்று வந்த போது, திடீரென நீதிமன்றக் கட்டடத்தின் நான்காம் மாடியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
நான்காம் மாடியில் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறைகள் காணப்படுவதனால் அதற்குள் பிரவேசிக்க வெளிநபர்களுக்கு அனுமதியில்லை.
நீதவான் ஒருவர் உத்தியோகபூர்வ அறைக்கு சென்ற போது பாம்பைக் கண்டு பதற்றமடைந்து, நீதிமன்ற உத்தியோகத்தர்களிடம் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பொல்லுகளுடன் சென்று பாம்பை பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த நீதிமன்ற செய்தி சேகரிப்பில் ஈடுபடும் ஊடகவியலாளர் ஒருவர் அனைவரையும் அந்த இடத்தை விட்டு அகலுமாறு கோரி வெறும் கையில் பாம்பை பிடித்து போத்தல் ஒன்றில் அடைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றம் தணிந்தது.