அரசாங்கம் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை எதிர்த்தும் பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றினைக் கையளித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயினால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் சமய ரீதியிலான வங்கி முறையொன்றினை அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிகிறோம். இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இதுவரை ஆட்சி செய்த ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு. கட்சி பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன் நாட்டை தேவையற்ற பிரச்சினைகளுக்கும் ஆளாக்கியுள்ளன.
மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலான சமய ரீதியிலான வங்கி முறை ஆரம்பிக்கப்படமாட்டாது என ஏற்கனவே எமக்கு எழுத்து மூலமான உறுதி வழங்கியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் இஸ்லாமிய வங்கிமுறையை நிறுவ முயற்சிப்பதானது மிகவும் கவலைக்குரியதாகும்.
ஆட்சியாளர்களின் திறமையற்ற ஆட்சியினால் முஸ்லிம் அல்லாத நாடொன்றில் இவ்வாறான இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த இரகசியமாக முயற்சிக்கப்படுகிறது. மக்களின் பணம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டிய பாராளுமன்ற மும் இது தொடர்பில் மௌனமாக இருப்பது மிகவும் ஆபத்தானதாகும் என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.