மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வீடுகளில் தங்கியிருப்போர் பற்றிய விபரங்களை பதிவு செய்யுமாறு போலிஸார் கோரியுள்ளனர்.
மட்டக்களப்பு நகரப் பிரதேசத்திலும் அண்மித்த பகுதிகளிலும் விபரங்களை திரட்டுவதற்கான சிறப்பு படிவங்கள் தற்போது போலிஸாரால் நேரடியாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
வீடுகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக தங்கியிருப்போர் என வகைப்படுத்தப்பட்டு விபரங்கள் உறவு முறையுடன் அதற்கான படிவத்தில் போலிஸாரால் கோரப்பட்டுள்ளன.
வீட்டு உதவியாளர்கள் உட்பட தற்காலிமாக குடியிருப்போர் பற்றிய விபரங்களில் நிரந்தர வதிவிடம் , உறவு முறை, தங்குவதற்கான காரணம் மற்றும் தங்கியிருக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கால எல்லை போன்ற விபரங்களும் கேட்கப்பட்டுள்ளன.
போலிஸ் கட்டளைச் சட்டம் 76ம் பிரிவின் கீழ் தான் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விபரங்கள் திரட்டப்படுவதாக அந்த படிவத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என உள்ளுர் போலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெறுவது போல் வழமையான செயல்பாடு என்றும் அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. BBC – TAMIL